வட இந்தியாவில் விற்கமுயன்ற நடராஜர் சிலை... தஞ்சாவூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது!

0

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரியைச் சேர்ந்த பிரபாகரன் (27), பைசல் அகமது(27), அய்யம்பேட்டை சக்கரா பள்ளியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (26) ஆகிய மூன்று இளைஞர்கள் உலோக நடராஜர் சிலை ஒன்றைக் கடத்தி வைத்துக் கொண்டு விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மீட்கப்பட்ட நடராஜர் சிலை

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பைபாஸ் ரோட்டில், கடத்தப்பட்ட சிலையை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் அந்த மூன்று பேரும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி ராஜராம் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன், பைசல் அகமது, சாகுல் ஹமீது ஆகிய மூன்று பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் பையில் மறைத்து வைத்திருந்த நடராஜர் சிலையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடராஜர் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த மூன்று பேர் மீதும் எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில் பேசினோம். ``ஐம்பொன் நடராஜர் சிலையைக் கடத்தி வந்து அந்த மூன்று பேரும் அதை விற்க முயன்றனர். சிலையின் திருவாச்சி 21 சுடருடன் இருந்துள்ளது. அதில் 13 சுடர்களை அறுத்து எடுத்துள்ளனர். முக்கால் அடி உயரம்,1 கிலோ எடை கொண்டதாக அந்த நடராஜர் சிலை இருந்தது. எந்த கோயிலுக்குச் சொந்தமான சிலை, எப்போது கடத்தினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடராஜர் சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள்

அந்த நடராஜர் சிலையை வட இந்தியாவில் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக வட இந்தியாவைச் சேர்ந்த சிலரிடம் அந்த மூன்று இளைஞர்களும் பேசியுள்ளனர். அது குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த சிலை கடத்தலில் இன்டர்னேஷனல் சிலை கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் வட இந்தியாவில் எப்படி தொடர்பு ஏற்பட்டது... அவர்கள் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய இன்னும் இரண்டு பேரை கைது செய்யவிருக்கிறோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு நடராஜர் சிலை குறித்த அனைத்து விவரங்களும் தெரிய வரும்" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/6QF32ES
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*