மதுரை: பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்... மக்கள் பக்தி பரவசம்!

0

இரண்டு வருடங்களுக்குப்பின் லட்சக்கணக்கான மக்களின் கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி அனைவரையும் பரவசப்படுத்தினார்.

சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயிலின் 10 நாள் திருவிழா முடிந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் விழா தொடங்கியது. சைவம் - வைணவ ஒற்றுமை விழா என்று இத்திருவிழா குறிப்பிடப்படுகிறது.

கள்ளழகர்

கடந்த 14-ம் தேதி அழகர்மலை கோயிலிலிருந்து மதுரையை நோக்கி சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் கிளம்பி வந்தார். கண்டாங்கிப் பட்டு அணிந்து சங்கு சக்கரம், தேரிக்கம்பு, வளைத்தடியுடன் தங்கப் பல்லக்கில் கிளம்பினார்.

பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, சுந்தராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நூற்றுக்கணக்கான மண்டகப்படியில் அருள்பாலித்து மதுரை மாநகரின் எல்லையான மூன்றுவாடிக்கு நேற்று காலை வந்தடைந்தார்.

கள்ளழகர்

மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இங்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அதைத்தொடர்ந்து புதூர், தல்லாகுளம்பகுதியில் அமைந்துள்ள மண்டகப்படியில் அருள்பாலித்துவிட்டு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு இரவு 9 மணிக்கு வந்தடைந்தார்.

இங்கும் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டாடைகளை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தில் மக்களுக்குக் காட்சியளித்துவிட்டு பின்பு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

கள்ளழகர்

அதன் பின்பு தங்கக் குதிரையில் கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக வைகையாற்றுக்கு வருகை தந்தார். ஆற்றை சுற்றிலும், ஏவி மேம்பாலமும் மின்விளக்குகளால் ஜொலித்தது.

ஏற்கெனவே அவரை வரவேற்க வீரராகவப்பெருமாள் தங்கக் குதிரையில் எழுந்தருளியிருந்தார். பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் காலை 6.10-க்கு ஆற்றில் இறங்கினார்.

பல மாவட்டங்களிருந்து வந்திருந்து விடியும்வரை விழித்திருந்த மக்கள் உற்சாகமாக கோவிந்தா கோஷம் எழுப்பினார்கள். கள்ளழகர் பச்சைப் பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/kN6vdZx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*