தஞ்சாவூர்: தப்பை தட்டி கேட்ட ஆடிட்டர் கொலை... அதிமுக பெண் பிரமுகரின் மகன் உட்பட 4 பேரிடம் விசாரணை

0

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை தட்டிக்கேட்டு வந்த பொது நலவாதியான ஆடிட்டர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் மகன் உட்பட நான்கு பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடிட்டர் மகேஷ்வரன்

தஞ்சாவூர், கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன், வயது 45. ஆடிட்டரான, இவர் தன் வீட்டுக்கு அருகிலேயே பண்ணை அமைத்து ஆடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகிறார். பண்ணைக்கு எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டணக் குளியலறை மற்றும் கழிவறையினை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார்.

கழிவறை ஏலம் எடுத்தது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் ஒருவருக்கும், ஆடிட்டருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பண்ணையில் தங்கியிருந்த ஆடிட்டர் மகேஷ்வரனை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டனர். இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், ஆடிட்டர் மகேஷ்வரன் அப்பகுதியில் எந்த தப்பு நடந்தாலும் தட்டி கேட்டு வந்துள்ளார். அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பயன்படுத்தி வருவதற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்துள்ளார்.தெருவில் என்ன பிரச்னை என்றாலும் முதல் ஆளாக நின்று அதனை தீர்த்து வைப்பார். தெருவாசிகள் அனைவரும் அவரை பொதுநலவாதி என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர்.

ஆடிட்டரின் பண்ணைக்கு எதிரிலேயே மாநகராட்சி கழிப்பறை ஒன்று இருந்தது. அதனை கடந்த பத்து வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பெண் பிரமுகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். குத்தகை பணத்தையும் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. குளம் ஒன்றை குத்தகைக்கு எடுத்திருந்த அவர் அதற்கான பணத்தையும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை

கோயில் விழா என கூறி அந்த பெண் பிரமுகர் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளார். அதையும் தட்டி கேட்டுள்ளார் ஆடிட்டர். இன்னொரு பிரமுகர் ஒருவர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என கூறி பணம் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுப்பட்டதை அறிந்து வசூல் செய்த பணத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படையுங்கள் இல்லை என்றால் போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவேன் என கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் அரசு இடத்தை வச்சிருக்குறது தப்பு அந்த இடத்தை கையகப்படுத்த அதிகாரிகள் வரப் போறாங்கணு சொல்லியிருக்கிறார். அந்த அ.தி.மு.க பெண் பிரமுகர் நடத்தி வந்த குளியலறையை தற்போது ஆடிட்டர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் தொடர்ச்சியாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆடிட்டர் மகேஷ்வரனை வெட்டி கொலை செய்துள்ளனர்.

கொலை நடந்த இடம்

இது தொடர்பாக அந்த அதிமுக பெண் பிரமுகரின் மகனான இட்லி கார்த்தி உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் முடிவில் என்ன காரணத்துக்காக கொலை நடந்தது குற்றவாளிகள் யார் என்கிற விவரம் தெரிய வரும்” என்றனர்.

அப்பகுதி மக்கள் சிலர், ``சமூகத்திற்கு எதிராக நடைபெறும் எந்த செயலாக இருந்தாலும் யார் என்னனு பாக்காமல் தட்டி கேட்பார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தாலும் எந்த பிரச்னையும் ஏற்படாமல் குடும்பம் நடத்தி வந்தார். தெருவுல எந்த நல்லது கெட்டது என்றாலும் முதல் ஆளாக வந்து நிப்பார்.தப்பை தப்பை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் ஒருவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பது பெரும் வருத்தத்துக்குரியது என சோகமாக தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/nbvDQEw
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*