சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல அரசு பேருந்து ஒன்றில் பெண் ஒருவர், தனது மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் மோகனூர் சாலை அருகே பேருந்து வந்தபோது அந்த பெண் பயணி தனது பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை என கூறி கதறி அழுதுள்ளார். இந்த நிலையில், அரசு பேருந்தில் இருந்து மோகனூர் சாலையில் இறங்கிய மூன்று பெண்கள் மீது சந்தேகம் அடைந்த பேருந்து நடத்துநர், பேருந்து ஓட்டுனரை பேருந்தை நிறுத்துமாறு கூறி விட்டு பேருந்தில் இருந்து நடத்துநர் இறங்கி வேகமாக மோகனூர் சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று பெண்களை நோக்கி ஓடிச்சென்றுள்ளார்.
இதைப் பார்த்த அந்த பெண்கள், கையில் இருந்த தங்க நகைகளை கீழே போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் நின்றுகொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் கீழே போட்ட அந்த தங்க நகையை நடத்துநர் எடுத்துக் கொண்டுபோய் பேருந்தில் ஏறி, பொதுமக்களிடம் பேருந்து பயணம் செய்த பெண்ணிடம் இந்த மூன்று பெண்களும் நகை திருடியது குறித்து கூறியுள்ளார். பின்னர், மூன்று பெண்களிடமும் இருந்து மீட்கப்பட்ட 5 பவுன் தங்க நகைகளை பேருந்தில் பயணம் செய்த அந்த பெண்ணிடம் பேருந்து நடத்துநர் ஒப்படைத்தார். பேருந்து நடத்துனரிடம் இருந்து 5 பவுன் தங்க நகையை பெற்றுக்கொண்ட அந்த பெண் பயணி அழுதுகொண்டே நகையை மீட்டு கொடுத்த நடத்துனரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகையை திருடிய மூன்று பெண்களையும் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த மூன்று பெண்களிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், பேருந்தில் நாமக்கல்லில் இருந்து ஏறி திண்டுக்கல் நோக்கி சென்ற அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து பயணம் செய்த போது சில்லரை காசுகளை கீழே போட்டு விட்டு சில்லரை காசுகள் கீழே கொட்டி விட்டது. அதை எடுத்து தாருங்கள் என கூறி விட்டு அவரை திசைதிருப்பி அவர் பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடியதாக போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
மேலும், பேருந்து நடத்துநர் ஓடி வருவதை பார்த்ததும் நகைகளை திருடியது தெரிந்து விட்டது என தெரிந்து எதுவும் தெரியாததது போல் நகைகளை கீழே போட்டு ஓடாமல் அங்கேயே நின்று கொண்டதாகவும் கூறியுள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் திருச்சி மாவட்டம் லால்குடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராணி, வைதேகி, ஆராதனா என்பது தெரியவந்தது. நகைகளை பறிகொடுத்தவர், குருந்தம்பாடி, டி. அய்யலூரைச் சேர்ந்த சாந்தாமணி என்பதும் மட்டும் தெரியவந்துள்ளது. அதே பேருந்தில் அவர் சென்று விட்டதால் அந்த பெண் பயணியின் முகவரியும், நகையை சரியான சமயத்தில் சாதுர்யமாக செயல்பட்டு நகைகளை மீட்டு கொடுத்த பேருந்து நடத்துனர் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த மூன்று பெண்களிடமும் பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/spDdqY6
via
