புதுச்சேரி, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத் (எ) பொடிமாஸ். பிரபல ரெளடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எதிரிகளை கொலை செய்வதற்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவர் கைதேர்ந்தவர். லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியில் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ள ரெளடிகளில் இவரும் ஒருவர். அத்துடன் லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் குற்றப்பதிவேட்டிலும் இவரின் பெயர் இருக்கிறது.

இவரின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு கடந்த 2020-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளி வந்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் லாஸ்பேட்டை சண்முகா நகர் பாய் தோப்பில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு ரெளடிக் கும்பல் பதுங்கியிருப்பதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் சென்றது. அதனடிப்படையில் வீச்சரிவாள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் உள்ளிட்டவையுடன் சுற்றி வளைக்கப்பட்ட அந்த கும்பலில், சரத் என்ற பொடிமாசும் ஒருவர்.
அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எதிரிகளை கொலை செய்வதற்காக பதுங்கியிருந்த தகவல் வெளியானது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் சரத். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதியிலுள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அவரின் நடவடிக்கைகள், செல்லுமிடம் போன்றவற்றை நோட்டமிட்டு வந்த அவரின் எதிரிகள், இன்று அதிகாலை 4 மணிக்கு பயங்கர ஆயுதங்களுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த சரத்தை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து சரத்தின் தலை மற்றும் கழுத்துப் பகுதியை குறிவைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது அந்த கும்பல். அதில் சுருண்டு விழுந்த சரத், துள்ளத்துடிக்க உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடதிற்கு விரைந்த காவல்துறை சரத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது. இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “சரத் என்ற பொடிமாஸுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரெளடிகள் ஜெகன், அவரின் தம்பி ஜனார்த்தனர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த வருடம் நாட்டு வெடிகுண்டு வீசி ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சித்தார் சரத். ஆனால் ஜனார்த்தனன் தப்பிவிட்டார். அந்த சம்பவத்திலிருந்து இருதரப்புக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியிருக்கிறோம்” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Iu81Mdr
via
