நாமக்கல்: வேறு பெண்ணுடன் பேசிய வடமாநில சிறுவன்; கண்டித்த காதலி - சிறுமி கொல்லப்பட்ட கொடூரம்

0

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அதேபோல, சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலை செய்து வருகிறார். இவரிடம், சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த அவருடைய நண்பரான 17 வயது சிறுவன் தனக்கும் கோழிப்பண்ணையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த அந்த நபர் அனுமதி தரவே, அந்த சிறுவன் தனது காதலி போதி மாண்டவி (16) என்பவருடன் மோகனூர் அருகே உள்ள நொச்சிப்பட்டிக்கு வந்துள்ளார். இதையடுத்து சிறுவன், காதலி போதி மாண்டவி ஆகியோரை கோழிப்பண்ணை உரிமையாளரிடம் சிறுவனின் நண்பர் அழைத்து சென்றுள்ளார். ஆனால், அந்த கோழிப்பண்ணை உரிமையாளர், 'குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க முடியாது. சட்டப்பிரச்னை ஏற்படும். அவர்களை உடனே இங்கிருந்து அழைத்துச் செல்' என்று கோபமாக தெரிவித்துள்ளார். இதனால், மோகனூர் பகுதியில் தங்கியிருக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரோடு, அந்த சிறுவனும், சிறுமியும் தங்கியிருந்துள்ளனர்.

நாமக்கல்

இந்நிலையில், சிறுவன் செல்போனில் வேறு ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த போதி மாண்டவி, 'யாருடன் பேசி கொண்டிருக்கிறாய்?. நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கிறாய்?' என்று சந்தேகத்துடன் கேட்டதாக தெரிகிறது. அப்போது, அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தன்னை சந்தேகமாக பேசிய காதலியின் துப்பட்டாவால் போதி மாண்டவியின் கழுத்தை இறுக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த சிறுமி துடிதுடித்து இறந்துள்ளார். இதை அறிந்ததும் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மோகனூர் காவல் நிலைய போலீஸார், போதி மாண்டவியின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த மோகனூர் காவல் நிலைய போலீஸார் தப்பியோடிய சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து, அந்த சிறுவனிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/whqVBk8
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*