ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதி ஶ்ரீ (25) இந்திய அளவில் 42-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இதுகுறித்து சுவாதி ஶ்ரீ கூறுகையில், ``இது என் மூன்றாவது முயற்சி. என் சொந்த ஊர் ஊட்டி. பள்ளிப் படிப்பு முடிச்சு வளர்ந்தது எல்லாம் அங்கதான். பி.எஸ்சி அக்ரிகல்சர் படிச்சிருக்கேன்.
கல்லூரியில படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் கனவு வந்துருச்சு. அப்புறம் சென்னை போய், ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகக் கடந்த நான்கு வருஷமா முயற்சி பண்ணிட்டு இருந்தேன். போன வருஷம் 126-வது ரேங்க் எடுத்து ஐ.ஆர்.எஸ் கிளியர் பண்ணியிருந்தேன். ஆனா, என்னோட இலக்கு ஐ.ஏ.எஸ் தான்.
அதனால, அங்க போகாம திரும்பி முழு மூச்சோட முயற்சி பண்ணிணேன். முன்னாடி என்ன தப்பெல்லாம் பண்ணியிருக்கேன்னு கண்டுபிடிச்சு அதை சரிபண்ணினேன். அதனாலதான் இந்த முறை 42-வது ரேங்க் எடுத்துருக்கேன்.
எனக்கு உதவி பண்ணின பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் பெரிய நன்றி. விவசாயம், மற்றும் பெண்களுக்காக நிறைய திட்டங்கள், மாற்றங்கள் கொண்டு வரணும். அதுதான் என் ஆசை. அதுமட்டுமல்ல, எந்தத் துறை கொடுத்தாலும் சிறப்பா செயல்படுவேன்.
அரசுத் தேர்வுக்கான செயல்முறை மிகவும் பெரிது. தொடர்ந்து நிறைய கடின உழைப்பைப் போடணும். முதல்ல உங்களை நீங்க நம்பணும். அப்படி இருந்தால் ஒரு நாள் நிச்சயம் வெற்றி உங்களைத் தேடி வரும்” என்றார் நம்பிக்கையுடன்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/PEsyTBw
via
