புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர்கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன் அடைக்கன். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியிருக்கிறது. இவர்களுக்கு ஜெகதீசன்(2) என்ற மகனும், தர்ஷினியா என்ற 9 மாதக் கைகுழந்தையும் இருந்தனர். பொன் அடைக்கன் கோயம்புத்தூரில் உள்ள கம்பெனி ஒன்றில் கூலித் தொழிலாளராக வேலைப் பார்த்து வந்திருக்கிறார். பொன் அடைக்கன் ஊருக்கு வந்துவிட்டாலே, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கமாம்.
பொன் அடைக்கனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதான் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவிழாவுக்காக அவர் ஊருக்கு வந்திருக்கிறார். வழக்கம்போல இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பொன் அடைக்கன் வெளியே கிளம்பிச் சென்றிருக்கிறார்.
குடும்பத் தகராறில் மன உளைச்சலில் இருந்த அவரின் மனைவி பஞ்சவர்ணம், தன் குழந்தைகள் இருவரையும் அடுத்தடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். இதனை, செல்போனில் தொடர்புகொண்டு தன் தாய்க்கு தெரிவித்தவர், தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். பின்னர், இறந்த குழந்தைகளை வீட்டுக்கு வெளியே எடுத்துவந்து தன் மடியில் வைத்தவாறு பித்துப் பிடித்தது போல அமர்ந்து இருந்திருக்கிறார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பொன்னமராவதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே, சம்பவ இடத்துக்குவந்த பொன்னமராவதி போலீஸார், குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் பெற்ற தாயே பிள்ளைகளைக் கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/dDjr321
via
