"கடந்த ஆண்டைவிட 4.81% கூடுதல் தேர்ச்சி!" – புதுச்சேரி, காரைக்காலின் 10, +2 பொதுத் தேர்வு முடிவுகள்

0

தமிழகம், புதுச்சேரியில் +2 படித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த மே மாதம் பொதுத் தேர்வு நடைப்பெற்றது. அதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6,876 மாணவர்கள், 7,547 மாணவிகள் என மொத்தம் 14,423 பேர் தேர்வெழுதினர். அந்தத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. புதுச்சேரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை முதல்வர் ரங்கசாமியும், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் வெளியிட்டனர். அதன்படி 6,486 மாணவர்கள், 7,379 மாணவிகள் என 13,865 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.13%.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இது கடந்த முறையை விட 4.81 சதவிகிதம் கூடுதலான தேர்ச்சி. அதேபோல தேர்வெழுதிய 14,423 மாணவர்களில் 13,865 பேர் தேர்ச்சியடைந்திருக்கின்றனர். 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் இரண்டு அரசுப் பள்ளிகளும் அடங்கும். கடந்த ஆண்டை விட அரசுப் பள்ளிகள் 10 சதவிகிதம் கூடுதல் தேர்ச்சியை பெற்றுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளும் உயர்கல்வி படிப்பதற்கு வசதியாக அரசுக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கிக் கொடுக்கப்படும். கல்வி கட்டணங்கள் குறித்து அரசு விரைவில் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடும்” என்றார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.13%. அதேபோல அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 91.96%. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய 4,744 மாணவ, மாணவிகளில் 4,398 பேர், அதாவது 92.71% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதேபோல தனியார் பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய 7,510 மாணவ, மாணவிகளில் 7,457 பேர், அதாவது 99.29% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதேபோல காரைக்கால் அரசுப் பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய 1,386 மாணவ, மாணவிகளில் 1,239 பேர் அதாவது 89.39% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தனியார் பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய 784 மாணவ, மாணவிகளில் 771 பேர் 98.47% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

அதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகளைக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் கடந்த மே மாதம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,335 மாணவர்கள், 8,180 மாணவிகள் என மொத்தம் 16,515 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். அதில் 7,476 மாணவர்கள், 7870 மாணவிகள் என 15,346 பேர் தேர்ச்சியடைந்திருக்கின்றனர். அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்துப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் 92.92%. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 85.01%. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 292 பள்ளிகளில் 114 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருக்கின்றன. அதில் 12 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

தேர்வு முடிவுகளை வெளியிட்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், “திட்டமிட்டபடி புதுச்சேரியில் ஜூன் 23-ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும். அன்றைய தினமே மாணவர்களுக்கான அரசு பேருந்துகள் இயக்கப்படும். மாலை மற்றும் மதிய உணவுகளுடன், சீருடை, புத்தகங்களும் வழங்கப்படும். 11-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்றே துவங்குகிறது” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Xp9BrxC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*