தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100வது நாளான மே 22-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்கள் பேரணியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. இருப்பினும் ஆலையை மீண்டும் திறந்திட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
இருப்பினும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஆலைக்கு ஆதரவாவும், ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என ஆலைக்கு எதிராகவும் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இருப்பினும் ஆலைக்கு எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் ஸ்மெல்டர் காம்பளக்ஸ், சல்பியூரிக் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளாண்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட், ஆர்.ஓ யூனிட்டுகள், ஸ்டெர்லைல் குடியிருப்புகள் உள்ளிட்ட 10 பகுதிகளை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், “வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் சூழ்ச்சிகள் உள்ளடங்கி இருக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆலைக்கு எதிரான மக்களின் போரட்டத்தின் வேகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியாகக்கூட இருக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆலைத்தரப்பே ஆலை விற்பனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் எந்த முறையீடும் செய்யாமல் தன்னிச்சையாக அறிவித்ததே சட்ட விரோதம்.
ஆலை விற்பனை குறித்து அரசு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. வேதாந்தாவே மற்றொரு பினாமி கம்பெனியின் பெயரில் மீண்டும் ஆலையில் காப்பர் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம். ஸ்டெர்லைட் மட்டுமல்ல, எந்த ஒரு பெயரிலும் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் இந்த மண்ணில் இயங்க அனுமதிக்க மாட்டோம். தமிழக அரசு இந்த விளம்பரம் குறித்து ஆலைத்தரப்பிடம் விளக்கம் கேட்க வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/r9V072b
via
