புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.15 மணிக்கு தமிழக அரசு போக்குவரத்தின் ஏ.சி பஸ் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. முன் பதிவுகள் இல்லாததாலும், பல மணி நேரங்கள் பேருந்துக்காக வெய்யிலில் காத்திருந்ததாலும் பயணிகள் அதில் ஏறி இடம்பிடித்து அமர்ந்தனர். அப்போது அங்கு வந்த உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ ஆக பணி புரியும் முருகேசன், இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அங்கிருந்து எழுந்திருக்குமாறு கூறினார்.
அதற்கு அந்த பெண் முன்பதிவு இல்லாத பேருந்தில் ஏன் எழ வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏ.எஸ்.ஐ முருகேசன், அந்த இருக்கையை தாம் ஏற்கெனவே இடம் பிடித்து வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். பேருந்தின் நடத்துநரும் காவலருக்கு ஆதாரவாக நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இங்கு யாரும் இடம்பிடிக்கவில்லை என்று கூறிய அந்த பெண்ணிடம், இந்த சீட்டை ரிசர்வ் செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அந்த ஏ.எஸ்.ஐ. அதற்கு, ``இந்த பஸ் ரிசர்வேஷன் இல்லை. அப்படியென்றால் பின்.என்.ஆர் எண்ணை காட்டுங்கள்” என்று கேட்ட அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் ஏ.எஸ்.ஐ முருகேசன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வாக்குவாதத்தை அந்த பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் கோபமடைந்த ஏ.எஸ்.ஐ முருகேசன், ”போட்டோ எடுத்ததுக்கு பதில் சொல்லனும்ல” என்று கூறிக்கொண்டே அந்த இளைஞரிடமிருந்து செல்போனை பறித்தார். அதையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து ஜீப்பை வரவழைத்து, குற்றவாளிகளைப் போல வீடியோ எடுத்த இளைஞர், அந்த பெண் மற்றும் அவரது கணவரை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்னை ஆனதை அடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஏ.எஸ்.ஐ ஒருவர் தனது உறவினருக்காக அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/xVGEBT0
via
