``என் மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் பதவி விலகத் தயார்" - அமைச்சர் பி.மூர்த்தி ஆவேசம்

0

``பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் நடக்கிறது, பணம் வாங்கிக்கொண்டு ஒரே நாளில் இடமாறுதல் நடக்கிறது” என சமீபத்தில் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் குற்றம்சாட்டி பேசினார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இது தி.மு.கவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.மூர்த்தி

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, ``அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். பணம் வாங்கிக்கொண்டு ஒரே நாளில் சார் பதிவாளர் அதே இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டதாக வாய்க்கு வந்ததை பேசியிருக்கிறார்.

பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே குடும்ப சூழ்நிலை காரணமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஒரே நாளில் இட மாறுதல் செய்ததாக ஆதாரம் இருந்தால் அண்ணாமலை தரட்டும். நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன். ஆதாரம் தராவிட்டால் அவர் கட்சிப் பதவியிலிருந்து விலக வேண்டும்.

அரசுத்துறைகளில் ஊழியர்களின் குடும்பச் சூழல் காரணமாக பணிமாறுதல் வழங்குவது வழக்கமான ஒன்று. தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிடமாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு.

அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டத்தில் 2,500 ஏக்கர் நிலம் போலியாக பதிவு செய்யப்பட்ட தகவல் எனக்கு கிடைத்ததும் ஒரு மணி நேரத்தில் விசாரித்து அந்த சார் பதிவாளர் இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், பா.ஜ.க போராட்டம் நடத்திய பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அண்ணாமலை கூறுவது வேடிக்கை.

கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில்தான் பத்திரப்பதிவுத் துறை மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில்தான் பல கோடி ரூபாய் மதிப்பில் போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்தெல்லாம் அண்ணாமலை வாய் திறக்க மாட்டார். அதில் தொடர்புடைய 50 சார் பதிவாளர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்முடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு 7 மாதங்களாக கிடப்பில் உள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்த முன்மாதிரி சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது ஏன் என்று அண்ணாமலை ஒன்றிய அரசிடன் கேட்டு சொல்ல வேண்டும்.

பி.மூர்த்தி

இதனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான போலி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. பத்திரப் பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்ததினால் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 13,500 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது" என்றார்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/psL7VBd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*