மதுரை மாநகர பாஜக சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. மாநகரச் செயலாளர் டாக்டர். சரவணன் ஏற்பாட்டில் பிரமாண்டமாக நடந்த இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன், மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டனர்.
அண்ணாமலை பேசும்போது , "திரண்டு வந்த தொண்டர்களை காவல்துறையாலும், அரசாலும், வருண பகவானாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசுமுறைப் பயணமாக ஆப்ரிக்கா சென்றிருந்த அமைச்சர் முரளிதரன், நான் அழைத்ததற்காக இந்தியா வந்து இறங்கியவுடன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ளார்.
உக்ரைன் போர் நடந்தபோது அவ்வளவு நெருக்கடியான சூழலிலும் நாம் எத்தனை மணிக்கு தொடர்பு கொண்டாலும் பேசுவார். அவரால்தான் தமிழகத்தை சேர்ந்த தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊருக்கு வந்தனர். இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் அவருக்கு தகவல் சொல்லுவோம். அதனால், மீனவர்கள் சிறையிலிருந்து மீடக்கப்பட்டனர். அவருக்கு நன்றி சொல்கிறேன்.
அமைச்சர் முரளிதரன் மத்திய அரசின் சாதனையைப் பற்றி பேசினார். நான் திமுக அரசின் வேதனையைப் பற்றி பேசுகிறேன். தி.மு.க அரசின் ஆட்சியை திராவிட மாடல் என்று பெருமையாக சொல்கிறார்கள். சினிமா மாடல் ஆட்சிதான் நடக்கிறது.
சம்பந்தமில்லாமல் முதலமைச்சர் பள்ளிகளுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் சர்ப்ரைஸ் ஆய்வு செய்யப்போகிறார். ஆனால், அவங்க டி.வி கேமராமேன் அங்கு தயாராக இருக்கிறார். அவர் செல்வதற்கு முன்பே அந்த இடம் சூட்டிங் ஸ்பாட்டாகி விடுகிறது. அவர் எப்போது போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்ய ஆரம்பித்தாரோ அப்போதிருந்து தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
கூட்டு பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் நடந்ததே இல்லை. தற்போது அதிகமாகியுள்ளது. காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது.
ஊழலை பற்றி சொல்லவே வேண்டாம். அமைச்சர் மூர்த்தி கட்டுப்பாட்டிலுள்ள பத்திரப்பதிவுத் துறையில காலையில் ஒரு அதிகாரி டிரான்ஸ்பர் செய்யப்பட்டால் மாலையில் மீண்டும் அதே இடத்துக்கு வந்து விடுகிறார்.
தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் நிலத்தை பதிவு செய்தார்கள். அதை தடுத்து நிறுத்தியது பா.ஜ.கதான். அதைப்பற்றி மூர்த்தியிடம் கேட்டால், அது எங்க ஆட்சியில் நடக்கல, கடந்த ஆட்சியில் நடந்ததாக சொன்னார். அந்தளவுக்கு அவர் துறையில் நடக்கும் மோசடிகள் பற்றி அவருக்கு தெரியவில்லை. அவருடைய எண்ணம் முழுவதும் மதுரை மாவட்டத்தில் கல் குவாரிகளை திறப்பதில்தான் குறியாக உள்ளது.
மதுரையின் இன்னொரு அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜனிடம் எதுவும் கேட்கவே முடியாது. கேட்டால் என்னைப் பற்றி தெரியுமா? என் தந்தையை பற்றித் தெரியுமா? தாத்தாவைப் பற்றி தெரியுமா என்றுதான் பேசுகிறார். பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக்கூடாது என்பார். ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை மத்திய அரசு கொடுத்துவிட்ட பின்பும் எவ்வளவு நிலுவை உள்ளது என்று தெரியவில்லை என்று உளறுகிறார்.
தமிழக அமைச்சர்களுக்கு தற்போது துபாய் வியாதி வந்துள்ளது. முதலமைச்சரைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சரும் வெளிநாடு செல்கிறார்கள். முதலமைச்சர் அடுத்து லண்டன் செல்லவுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து செல்லவிருக்கிறார். எதற்கு என்று கேட்டால், கடலில் காற்றலை அமைத்துள்ளதை பார்க்க செல்கிறார் என்கிறார்கள். கடலில் சென்று அணிலால் மின் கம்பியை கடிக்க முடியாது என்பதால் அதில் ஆர்வம் காட்டுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் சோலார் பிளாண்ட் அமைக்க லஞ்சம் கேட்கிறார். இதை சொன்னால் என் மீது வழக்கு தொடுக்கிறார்.
இதுவரை தி.மு.க கட்சியாலும், அமைச்சர்களாலும் என் மீது 620 கோடி ரூபாய் அளவுக்கு மான நஷ்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தி.மு.க ஊழலை சொல்வேன்.
மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு சீண்டினால் மதுரை மக்களே பதிலடி கொடுப்பார்கள். மக்கள் பக்கம் இருந்து பேசும் ஆதீனத்தின் பக்கம் பா.ஜ.க இருக்கும்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மோசடி தொடர்பாக ராகுலிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த தமிழகத்திலிருந்து சென்ற காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி போலீஸ் சட்டையை கிழித்து விட்டது என்கிறார்கள். சண்டையில் சட்டை கிழியத்தான் செய்யும். நீங்கள் ஏன் டெல்லி போனீர்கள்?" என்று பேசினார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/8Foz5uf
via
