``அந்த அண்ணாமலையை நம்பி காத்திருந்தோம், இப்போ இந்த அண்ணாமலையை..!"- பாஜக-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்

0

தஞ்சாவூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பா.ஜக-வில் இணைகின்றனர். இந்த நிலையில், ``முன்பு எங்க அண்ணாமலையை நம்பி எதிர்பார்த்து காத்திருந்தோம், இப்போது இந்த அண்ணாமலையை நம்பி களமிறங்கியிருக்கிறோம். `ரஜினி கிட்ட என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த அரசியல் பா.ஜ.க-வில் இருக்கும்!' என அண்ணாமலை எங்களிடம் கூறியது உற்சாகத்தை அளித்திருக்கிறது" என ரஜினி ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி தன் ரசிகர்களை போர்களத்துக்கு தயாராகுங்கள் என உற்சாகப்படுத்தி... ரஜினி ரசிகர் மன்றமாக இருந்த தன் அமைப்பை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவருடைய அந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசியலையும் தாண்டி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க-வின் `பி டீம்' தான் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சி என பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களால் விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல், உடல் நிலை என பலவற்றை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை என ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர்களை அழைத்து அறிவித்தார் ரஜினி. அரசியலிலிருந்து பின்வாங்கிய அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது, மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.

ரஜினியுடன் ரஜினி.கணேசன்

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகும்... அதனைத் தொடர்ந்தும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அமைதியாக இருந்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்டச் செயலாலர் ரஜினி.கணேசன் தலைமையில், அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையவிருக்கின்றனர். பா.ஜ.க-வில் இணைவதற்கு ரஜினி ரகர்கள் அவரிடம் ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், ரஜினியும் பச்சைக்கொடி காட்டி விட்டார் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே பல மாவட்ட நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``ரஜினி அரசியலுக்கு வருவார் என எங்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு தூபம் போடும் விதமாக 2017-ல், `நான் அரசியலுக்கு வருவது உறுதி... 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவேன்!' என அறிவித்தார். மேலும் பூத் கமிட்டிகளை அமைக்கவும் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. நாங்களும் தலைவர் ரஜினி சொன்னது போலவே போருக்குத் தயாராவது போல் தேர்தலுக்குத் தயாராகி வந்தோம்.

பா.ஜ.க-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்

ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த சூழலில் உடல் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசியல் கட்சி தொடங்கவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை என ரஜினி அறிவித்தார். அத்துடன் மக்கள் மன்றமாக இருந்த தனது ரசிகர்கள் அமைப்பை மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றினார். வழக்கம் போல் ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்ட நாங்கள் அதன் பிறகு அரசியலில் தலையிடாமல் அமைதியாகவே இருந்தோம்.

`ரஜினி அரசியல் கட்சி தொடங்குகிறேன்!' எனக் கூறுவதற்கு முன்பு அவரின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த கட்சிகளில் இருந்து செயல்பட்டனர். ஆனால் கட்சி தொடங்குவதாக அறிவித்தப் பிறகு எல்லோரும் அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டனர். `உங்க தலைவர் அரசியலுக்கு வர மாட்டேனு சொல்லிட்டார்... அடுத்து என்ன செய்யப் போறீங்க'னு பலரும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

ரஜினி

இந்த நிலையில், பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு. முருகானந்தம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரிடம், `உங்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படும். பா.ஜ.க-வுக்கு வாங்க சிறப்பாக செயல்படலாம்' எனத் தொடர்ந்து பேசி வந்தார். தேசியக் கட்சி, தேசப்பற்று கொண்ட கட்சி, இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே என்ற பா.ஜ.க-வின் கொள்கை வரவேற்க கூடியது.

திராவிடம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதால் மாநிலத்துக்கு பின்னடைவு என்பதையும் உணர்ந்திருக்கிறோம். பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் ஆளுமை சிறப்பாக இருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து பா.ஜ.க-வில் இணைகிறோம். இது குறித்த தகவல் ரஜினி தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டது. ரசிகர் மன்றமாக இருந்தபோது எப்படி பல அரசியல் கட்சிகளில் இருந்தோமோ, அதே போல் இப்போது பா.ஜ.க-வில் இணைகிறோம். முன்பு எங்க அண்ணாமலையை நம்பி காத்திருந்தோம். இப்போது இந்த அண்ணாமலையை நம்பி அரசியலில் களமிறங்குகிறோம்" என்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரஜினி.கணேசன்

தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ரஜினி.கணேசனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 14 ஒன்றியங்கள், இரண்டு மாநகரங்கள், ஒரு நகரம் என மொத்தம் 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையவிருக்கிறார்கள். மேலும் கோவை, கடலூர், விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என் தலைமையில் நாளை தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையவிருக்கிறார்கள்.

அண்ணாமலை

அரசியல் என்பது வேறு, ரசிகர் மன்றம் என்பது வேறு. தலைவர் ரஜினிமீது நாங்கள் வைத்திருக்கும் பற்று, பாசம் எப்போதும் துளிகூட குறையாது. `ரஜினி கிட்ட என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த அரசியல் பா.ஜ.க-வில் இருக்கும், வாங்க சேர்ந்து செயல்படலாம்!' என அண்ணாமலை கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு சுயமரியாதை, தன்மானம், சுதந்திரம் போன்றவற்றை கொடுக்கும் கட்சியாகவும் திகழ்ந்து வரும் பா.ஜ.க-வுடன் எங்களுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், பா.ஜ.க-வில் இணையும் நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்போம். எப்போதும் போல் ரசிகர் மன்ற செயல்களையும் செய்வோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/zsAwvYd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*