கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரின் மனைவி திவ்யா பாரதிக்கு, பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து நான்கு நாள்களே ஆன திவ்யபாரதியின் பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து 12 தனிப்படைகள் அமைத்து, போலீஸார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு வெளியே தொடங்கி கோவை வரை சுமார் 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
மேலும் கோவை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தியவர்கள் குறித்து தெரியவந்தது.
உடனடியாக கேரள மாநிலம் பாலக்காடு சென்ற தனிப்படை போலீஸார், குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தி சென்ற கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஷமீனா என்ற பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸ் கைது செய்தது.
கணவரிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் ஷமீனாவிடம் விசாரணை செய்ததில், “என் கணவரிடம் இருந்து பிரிந்து, மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, சேர்ந்து வாழ்ந்து வருகிறேன்.
மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டார். அதனால் நான் கர்ப்பமாக இருப்பது போல நடித்தேன். எனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய் கூறினேன். பின்னர் மணிகண்டனிடம் பிறந்த குழந்தையை காட்ட வேண்டும் என்று கேட்டார்.
அதன் காரணமாக தான் இந்த குழந்தையை கடத்தி சென்றேன்.” என்று கூறியுள்ளார். குழந்தை கடத்தி சென்ற 22 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததற்கு தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Wk8tbMK
via
