வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஆர்.காமராஜ், டாக்டர்களான அவரின் மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரில் உள்ள ஆர்.காமராஜின் சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டில் தண்ணீர் தொட்டி, பாத்ரூம் என ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58.44 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று ரெய்டு நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள ஆர்.காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவில் உள்ள ஆர்.காமராஜின் சம்பந்தி டாக்டர் மோகன், புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட இருக்கும் ஸ்ரீ காமாட்சி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என தமிழகம் முழுவதும் 49 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
காலை 6 மணிக்கெல்லாம் இரண்டு கார்களில் 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் டீம், டாக்டர் மோகன் வீட்டிற்கு சென்று உடனேயே ரெய்டு நடத்த தொடங்கினர்.
ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வீட்டுக்குள் வைத்து மோகன் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோரிடம் சொத்து குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். இதனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் முழுவதுமாக வீடியோ எடுத்துக் கொண்டனர். பின்னர் வீட்டின் முன் பகுதியிலிருந்த தண்ணீர் தொட்டி, பாத்ரூம், வீட்டுக்குள்ளே உள்ள பாத்ரூம்கள் என ஒன்றை விடாமல் சோதனை நடத்தினர்.
இதையடுத்து வீட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை திறக்க சொல்லி அதற்குள்ளும் சோதனை நடத்தினர். காருக்குள் சில பேப்பர்கள் இருந்தது அது குறித்த விவரங்களை மோகனிடம் கேட்டறிந்ததுடன், அந்த பேப்பர்களை வாங்கி கொண்டனர். பின்னர் மீண்டும் தண்ணீர் தொட்டிக்குள்ளும், பாத்ரூமிலும் எதாவது இருக்கிறதா என எட்டிப்பார்த்தனர். மூன்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கிருந்தபடி அப்பகுதி முழுவதையும் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொணடனர். ஆர்.காமராஜ் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பிரமாண்ட முறையில் கட்டியுள்ளார். இதனை ஆர்.காமராஜின் மகன்களான டாக்டர்கள் இனியன், இன்பன், சம்பந்தி டாக்டர் மோகன் உள்ளிட்டோர் நிவாகம் செய்ய உள்ளனர்.
துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வந்து மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு கொடுத்திருந்தனர். அவரும் தேதி கொடுத்திருந்தாராம். ஆனால் சில காரணங்களால் மருத்துவமனை திறப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதுடன் பெரும்பாலும் மருத்துவமனை குறித்து கேட்டறிந்தனர். டாக்டர் மோகன் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அதிகாரிகளின் காரில் இருந்து இரண்டு லேப்டாப், பிரிண்டர் மிஷின் போன்றவை வீட்டுக்குள் எடுத்து சென்றனர்.
கைப்பற்றிய ஆவணங்களை ஸ்கேன் செய்து லேப்டாப்பில் சேவ் செய்து கொண்டனர். ரெய்டு மாலை வரை தொடரும் யாரையும் வீட்டுக்குள் அனுமதிகாதீங்க என கூறிய அதிகாரிகள் வெளி கேட்டை பூட்டி விட்டு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/BaKqM7n
via
