``ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள்? எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு காலியாக உள்ளது?' என்று சு.வெங்கடேசன்.எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு 29 பக்கங்களில் பதில் அளித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்.
இது குறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, "மத்திய இணை அமைச்சர் அளித்துள்ள தகவல்கள் மூலம் முனைவர் பட்ட அனுமதிகள் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு எப்படி அநீதியை இழைக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது.
போதிய அளவு விண்ணப்பதாரர்கள் இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.டி.பிரிவினருக்கு 7.5 சதவிகிதம், எஸ்.சி.பிரிவினருக்கு 15 சதவிகிம், ஓ பி.சி.யினருக்கு 27 சதவிகித இடங்களை ஐ.ஐ.டிக்கள் தந்திருக்க வேண்டும்.
அமைச்சர் தந்துள்ள தகவல்களின்படி பார்த்தால் எஸ்.டி பிரதிநிதித்துவம் 2.5 சதவீதமாகவே இருக்கிறது. 3,430 விண்ணப்பதாரர்கள் இருந்தும் அனைத்து ஐ.ஐ.டி-களிலும் சேர்த்து மொத்தம் 137 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எந்த ஐ.ஐ-டியுமே உரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை. கோவா, பிலாய், திருப்பதி ஐ.ஐ.டிக்களில் முறையாக 30, 31, 93 விண்ணப்பங்கள் வரப் பெற்றும், அவர்கள் ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை.
17,075 விண்ணப்பதாரர்கள் இருந்தும் அனைத்து ஐ.ஐ.டி-களிலும் சேர்த்து மொத்தம் 574 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்ததன் மூலம் எஸ்.சி பிரிவுக்கான பிரதிநிதித்துவம் 10 சதவீதமாகவே இருக்கிறது. கோவா, தன்பாத் தவிர அனைத்து ஐ.ஐ.டி-களும் உரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை.
சென்னை ஐ.ஐ.டியில் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் முனைவர் பட்ட அனுமதிகளில் மிக மிகக் குறைவாக உள்ளது. மொத்தம் 558 மாணவர்கள் முனைவர் பட்ட அனுமதிகளை பெற்றுள்ள நிலையில், 53 மாணவர்கள் மட்டுமே எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள். 20 பேர் மட்டுமே எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்.சி மாணவர்கள் 1,637 பேரும், எஸ்.டி மாணவர்கள் 346 பேரும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களாக இருந்துள்ளனர். எஸ்.சி மாணவர் இடங்கள் 23, எஸ்.டி மாணவர் இடங்கள் 13 காலியாக விடப்பட்டுள்ளன.
கல்வி நிறுவன நிதியில் இருந்து நடத்தப்படும் பிரிவுகள் மட்டுமின்றி திட்டம் அல்லது வெளி ஆதரவு நிதி மூலம் நடத்தப்படும் பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு அமலாகவில்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீடும் ஓரளவே தரப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐ.ஐ டி மட்டுமே விதி விலக்காக உள்ளது.
இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான குறைந்தபட்ச சதவிகிதமே ஆகும். அதை எட்டவே இந்த பாடுபட வேண்டியுள்ளது. சட்டம் வந்து 16 ஆண்டுகள் கழித்தும் இந்த நிலைமை தொடர்கிறது.
'மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2006' இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையில் உறுதி செய்ய வேண்டும் என கட்டளை இடுகிறது. ஆனால், ஐ.ஐ.டி-கள் அரசியலமைப்பு சட்டத்தை விட மனு தர்மத்தையே மதிக்கிறது. ஆகவே அனுமதிக்கப்பட்ட ஆண்டு எண்ணிக்கையை எந்த நெறிகளுக்கும் உட்படாமல் நிர்ணயித்து கொள்கின்றன.
இதன் மூலம் இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போக செய்கிறார்கள். கோரக்பூர் ஐ.ஐ.டி கல்வி நிறுவன நிதியில் நடத்தப்படும் பிரிவுகளுக்கு நிலையான அனுமதி எண்ணிக்கையையே வைத்திருப்பது மீறலி்ன் உச்சம் ஆகும்.
உயர்ந்த கல்வி நிறுவனங்கள் என்று தங்களை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐ.ஐ.டி-களின் சமூக நீதி குறித்த பார்வையும், அக்கறையும் தரை மட்டத்தில் உள்ளன. அனுமதி முறைமையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையீடு செய்யக் கூட முடியாத நிலை உள்ளது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/p847eSf
via
