தி.மு.க அரசை எதிர்த்து வரும் 25-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து, கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி, ``மக்கள் விரோத ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி வன்முறை மூலம் உளவுத்துறை என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.
`காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனத் தெரியவில்லை' என நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றனர். அரசு ஊழியர்கள் எப்போதும் தி.மு.க-வை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களே நொந்து நூலாகியிருக்கின்றனர்.
எல்லா தரப்பு மக்களும் பாதிப்படைந்திருக்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படாமல், விளம்பரத்திலேயே ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சொத்துவரியை அதிகரித்தனர். நம் ஆட்சியில் சொத்துவரி ஏற்றும் சூழ்நிலை வந்தும், மக்கள் நலன் கருதி எடப்பாடியார் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். மின்சாரக் கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்த வேண்டும் எனச் சொல்லவில்லை.
மானியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களில் கட்டணத்தை உயர்த்தச் சொல்வார்கள். மத்திய அரசாங்கம் சொல்லும் அனைத்தையும் மாநில அரசு கேட்க முடியுமா. இல்லை இவர்கள் எல்லாவற்றையும் கேட்கத்தான் செய்கிறார்களா.
மக்கள் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு மேற்கொண்டு சுமையை அதிகரித்து வருகின்றனர். எல்லா சாலைகளும் சேதமடைந்திருக்கின்றன. நாம் போராட்டம் செய்தாலே போலீஸ், அதிகாரிகள் அலர்ட் ஆகிவிடுவார்கள். மக்களின் உரிமையைக் கேட்டுப் போராட நம்மைத் தவிர, வேறு எந்தக் கட்சியும் கிடையாது.
தமிழ்நாட்டில் முக்கியமாக கோவையில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. எந்த அரசு அலுவலகம் சென்றாலும் லஞ்சம்தான் விளையாடுகிறது. ஆனால், அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் போல நம்மை பேசிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்
from மாவட்ட செய்திகள் https://ift.tt/y9SUDMn
via
