மலைத்தோட்ட விவசாயிகள்.. வனத்துறையினர் மோதல் முடிவுக்கு வருவது எப்போது?

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைத்தோட்ட பயிர்கள் அதிக அளவில் உள்ளன. அதிலும் குமரி மலைப் பகுதியான கரும்பாறை, மாறாமலை பகுதிகளில் விளையும் கிராம்புகளுக்கு உலக அளவில் மவுசு உண்டு. குமரி கிராம்புக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைத்தோட்ட விவசாயிகளுக்கு வனத்துறை நெருக்கடி கொடுப்பதாக ஒவ்வொரு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களிலும் புகார் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இது பற்றி கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்க செயலாளர் லாலாஜி கூறுகையில்,

லாலாஜி

"கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த அளவில மலைத்தோட்ட விவசாயிகளுக்கு வனவிலங்குகள் தொல்லையும், வனத்துறை கெடுபிடியும் அதிகமா இருக்கு. சில மாநிலங்களில பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதி கொடுத்திருக்கிறாங்க. காட்டுப்பன்றியை விவசாயிகளே வேட்டையாடலாம்னு அனுமதி கொடுத்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கு. கிராம்புச் செடியை நட்டு வளர்த்து வரும்போது மிளா அதை கடிச்சி நாசம் பண்ணிரும்.

பயிருங்க நிலையைப் பார்த்தல் இதயமே வெடிக்கிற அளவுக்கு வேதனையா இருக்கும். காய்கறி போட்டா காட்டுப்பன்றி அழிச்சிரும். நான் மூனு லட்சம் ரூபா செலவுல ரப்பர் மரத்தை நட்டிருந்தேன். அதை யானை வந்து அழிச்சிருச்சு. அதுக்கு உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்னு சொன்னாங்க. நானும் அதுக்கு முயற்சிப்பண்ணினேன். அப்பத்தான் ஒரு அதிகாரி 'மிஞ்சி மிஞ்சி போனா இருபத்தி அஞ்சாயிரம் ரூபா கிடைக்கும். அதுக்கும் ரெண்டு வருஷம் அலைய வேண்டி இருக்கும்'னு சொன்னார். அதோட அதை விட்டுட்டு வேற வேலை பார்க்க போயிட்டேன்.

மலையில் கிராம்பு சாகுபடி

மலைத்தோட்ட விவசாயிகளால நஞ்சில்லாத உணவை கொடுக்க முடியும். வனவிலங்குகளால மலையில எந்த காய்கறியும் பயிர் செய்ய முடியல. அதனால அரசாங்கம் தலையிட்டு வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ம் ஆண்டு மாற்றம் செய்து விவசாயிகள் பயிர் செய்ய உதவி செய்யணும். நாங்க காட்டுக்கு உள்ள வந்து வேட்டையாடல. அப்பிடி யாராவது காட்டுக்குள்ள வந்தா நீங்க என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. எங்க விவசாய நிலங்களுக்கு வந்து, நாசம் செய்யும் விலங்குகளை வேட்டையாட அனுமதித்து சட்டங்களை திருத்தும்படி அரசை கேட்டுக்கொள்கிறேன்.

அனுமதி கொடுத்தாலும் விவசாய நிலத்துக்கு வரும் காட்டுப்பன்றி போன்றவற்றை எப்பவும் விவசாயிகள் வேட்டையாடமாட்டாங்க. வேட்டை நடக்குதுன்னு தெரிஞ்சாலே எந்த விலங்கும் விளை நிலத்துக்கு வராது. இது வனவிலங்குகளை விளைநிலங்களுக்கு வராம விரட்டுற யுத்திதான். அதுமட்டுமில்லாம வனத்திற்குள்ளேயே விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கிறது, விலங்குகளுக்கான உணவுக்கு ஏற்பாடு பண்ணும் வேலையை வனத்துறை ஒழுங்கா செய்தாலே விவசாய நிலத்துக்குள்ள வன விலங்குகள் வராது.

கன்னியாகுமரி மாவட்ட நிலப்பரப்பில 36 சதவீதம் காடு இருக்கு. அதுபோக எங்கள் விவசாய நிலங்களில் தனியார் காடுகள் சட்டம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், வனவிலங்கு சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாயத்தின் புலிகள் நடமாடும் பகுதி, மலை பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் உணர் திறன் மண்டலம் என ஏழு சட்டங்கள் மூலம் விவசாயத்தை நசுக்குகின்றனர். மலையில உள்ள எங்க சொந்த தோட்டத்துகே நாங்க பயந்து பயந்து போகவேண்டிய நிலை இருக்கு. எங்க தோட்டத்தில ரோட்டை சீரமைக்க விடமாட்டேங்கிறாங்க. மிஷின் மூலம் பணிசெய் செய்யக்கூடாதுன்னு இடைஞ்சல் கொடுக்கிறாங்க.

கன்னியாகுமரி கிராம்பு

தனியார் காடு சட்டத்தைக் கொண்டு வந்து எல்லாத்துக்கும் பர்மிஷன் வாங்கணும்னு சொல்லுறாங்க. விவசாயிகள் பர்மிசனுக்காக எத்தனை நாள் அலைய முடியும். எங்க மலைத்தோட்ட விவசாயி ஒருவர் பழைய ரப்பர் மரங்களை மாத்திட்டு புதிய மரங்கள் நடுறதுக்காக குழிதோண்ட ஆள் கிடைக்கல. அதனால ஜே.சி.பி கொண்டு போகணும்னு அக்ரி அதிகாரிகள்கிட்ட பேசினோம். அதற்கு அவர் வனத்துறையில இருந்து பிரச்னை ஆகும்னு சொன்னார்.

நாங்க விவசாய நிலம் வாங்கும்போது இந்த சட்டங்கள் எதுவும் கிடையாது. நீங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டம் கொண்டு வந்து, எங்களை சுதந்திரமா விவசாயம் பண்ணவிடமாட்டேங்கிறீங்கன்னு சொல்லிட்டு இந்த பிரச்னையை கலெக்டர்கிட்ட கொண்டுபோனோம். கலெக்டர் பாரஸ்ட் ஆப்பீசர்கிட்ட பேசினார். அதுக்கு அவங்க அனுமதி மறுத்தாங்க. அப்பிடீன்ன ஜே.சி.பி கொண்டுபோகக்கூடாதுன்னு சட்ட விதி இருந்தா காட்டுங்கன்னு கலெக்டர் காட்டமா சொன்னதுக்கு அப்புறமா ஜே.சி.பி-யை அனுமதிச்சாங்க. இதுபோல ஏகப்பட்ட கெடுபிடிகளால விவசாயம் செய்யுற விருப்பமே இல்லாம போச்சுது.

அன்னைக்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் இருந்ததுனால, பலருக்கு வேலை கொடுக்கிறதுக்காக டவுணை விட அதிக விலை கொடுத்து தோட்டத்தை வாங்கினாங்க. இன்னைக்கு தோட்டத்தோட ரேட்டு செண்டுக்கு அஞ்சாயிரம் போகும். ஆனா நாகர்கோவில்ல ஒரு செண்ட் பத்து லட்சம் ரூபாய் போகுது. வனத்துறை அதிகாரிகள் கெடுபிடி பண்ணினப்ப, 'உங்ககூட சண்ட போட்டு விவசாயம் பாக்கணும்னு அவசியம் இல்ல. எங்களுக்கு அந்த விலையை கணக்கிட்டு பணத்த தாங்க நாங்க தோட்டத்த விட்டுட்டு போறோம்'னு சொன்னோம். வனத்துறை செய்யும் கெடுபிடியை பார்க்கும் போது பிரிட்டிஷ் காலத்தில இருந்த ரெளலட் சட்டம் போல பீல் பண்ணுறோம்" என ஆதங்கப்பட்டார்.

குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜாவிடம் பேசினோம், "விவசாயம் முழுவதும் வனப்பகுதிக்கு உள்ளேயே இருக்கு. விவசாய நிலத்துக்கும் காட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. விலங்குகள் விவசாய இடங்களையும் தாண்டிதான் போகும். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மாம்பழத்தணை போன்ற அணைகளுக்கு தண்ணீர் வனத்தில் உள்ள நீரோடைகள் மூலமாகத்தான் வருது. சிலர் ரப்பர், கிராம்பு போன்ற பயிர்கள் கொஞ்சம் தள்ளி வைத்தாலும் நீரோரை அழிஞ்சி போயிரும். அதனால 1965-ல தனியார் காடுகள் சட்டம் கொண்டு வந்தாங்க. அதுக்கும் கலெக்டர், டி.எஃப்.ஓ, தாசில்தார், விவசாயத்துறையை சேர்ந்தவங்க அடங்கிய குழு இருக்கு. விவசாயிகள் மரம் வெட்டவோ, ரோட்டை சரிபண்ணவோ மனு கொடுக்கிறாங்கன்ன அந்த கமிட்டி முடிவு செய்து அனுமதி கொடுக்கும்.

அந்த குழு அனுமதிச்சா அவங்க வேலை செய்யலாம். சில இடங்களில வனத்துறை வழியாக போகும் சாலைகளை சரி செய்ய முறையா அனுமதி வாங்கினாதான் செய்ய முடியும். தனியார் காடுகள் வரும் பகுதியில் மரங்கள் வெட்ட சென்னை முதன்மை வன பாதுகாவலரிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது விவசாய நிலங்களாக இருக்கும் பகுதி முன்பு வனமாக இருந்தவை.

கன்னியாகுமரி

எனவே வனவிலங்குகள் பயிரை சேதப்படுத்தினால் இழப்பீடு கேட்டு மனுகொடுக்கலாம். இல்லையென்றால் நிலத்தை சர்வே செய்து, அவர்களது இடத்தில் வேலி போட்டுக்கொள்ளலாம். மரச்சீனி கிழங்கு, வாழை போன்றவை போட்டால் வனவிலங்குகள் சேதப்படுத்தும். எனவே பயிர் மாற்றமும் தேவை. முடிந்த அளவுக்கு விவசாயிகளின் மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

வனத்தையும், வன விலங்களையும் பாதிக்காத வகையில் மலைத்தோட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலே 90 சதவீதம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும். இதை அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/bL7PdhV
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*