திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அண்ணாநகர் கச்சேரி ரோடுப் பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர், தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையத்தில் கூலிக்கு வேலை செய்து வருகிறார். இவருக்கும், அண்ணாநகர் அருகிலுள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சங்கரி என்ற இளம் பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் ஆனது. இந்த நிலையில், கர்ப்பமடைந்த சங்கரியின் வயிற்றில் 2 குழந்தைகள் உருவாகியிருப்பது, மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதனால், இளம் தம்பதியரும் அவர்களின் உறவினர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். நிறைமாதமான நிலையில், அடுத்த மாதம் பிரசவிக்கும் தேதியையும் மருத்துவர்கள் குறித்து கொடுத்திருக்கிறார்கள். உறவினர்களும்கூடி சீமந்தமும் செய்து மகிழ்ச்சியில் திழைத்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று விடியற்காலையில் சங்கரிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. மூச்சிரைப்பு அதிகமிருந்ததால், குடும்பத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், பணியிலிருந்த 4 செவிலியர்கள் சேர்ந்து, சங்கரிக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், சங்கரி இறந்துவிட்டார். வெளியுலகத்தைப் பார்ப்பதற்காக அவரின் வயிற்றுக்குள் இருந்த 2 சிசுக்களும் மடிந்துவிட்டன. இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதனர். அதுமட்டுமின்றி, மருத்துவர்கள் பணியிலில்லாமல் செவிலியர்களால் அளிக்கப்பட்ட அலட்சியமான சிகிச்சையே மரணத்துக்குக் காரணம் எனக்கூறி உறவினர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், வாணியம்பாடி நகர போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அப்போது, ‘தாயோடு சேர்த்து மூணு உயிர்ப் போய்ட்டு சார்...’ என்று அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, கணவரிடமிருந்து புகார் மனுவைப் பெற்று, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தன் ஆசை மனைவியையும், அவரின் வயிற்றிலிருக்கும்போதே தான் கொஞ்சி மகிழ்ந்த 2 வாரிசுகளையும் இழந்த வேதனையில் துடிக்கும் மதன் குமாரின் இழப்பை வரிகளால் விவரிக்க முடியவில்லை. அவரின் உறவினர்களும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/zm1bqQJ
via
