`என் அதிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்' - ஆட்சியரை கண்டித்து நாமக்கல் எம்.பி தர்ணா

0

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் சின்ராஜ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், இவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென்று எம்.பி தர்ணா செய்வதைப் பார்த்த அதிகாரிகளும், அங்கு வந்த பொதுமக்களும் காரணம் தெரியாமல் குழம்பினர். இவரின் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமையிலான அதிகாரிகள், எம்.பியை சந்தித்து, போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. அதனால், அங்கு பதட்டம் கூடியது. இந்த நிலையில் 10.30 மணி அளவில் அங்கு வந்த ஆட்சியர் ஸ்ரேயா சிங், போராட்டம் நடத்திக்கொண்டிருந்த எம்.பி சின்ராஜை சந்தித்தார். 'என்ன கோரிக்கை, எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்?' என கேட்டார்.

எம்.பி சின்ராஜை சமாதானப்படுத்தும் அதிகாரிகள்

அதற்கு நேரடியாக பதில் சொல்லாத எம்.பி, ``என் அதிகாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” எனக்கூறி, ஒரு ஃபைலை ஆட்சியரிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பின்னர் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து, சின்ராஜ் எம்.பி. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், ஆட்சியர். மதியம் 1 மணிக்கு மீண்டும் வந்து எம்.பி.யை சந்தித்தார்.

அப்போது எம்.பி.யிடம் ஆட்சியர், ஆகஸ்டு மாதத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூட்டம் நடத்த எம்.பி.யிடம் தேதி கேட்டார். மேலும், 'மின்வாரிய கணக்குக்குழு கூட்டம் நடத்துவதற்கு, கமிட்டி தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் பிறகு நடத்தி கொள்ளலாம்' என ஆட்சியர் சொல்லவும், 3 மணி நேரமாக நடந்த போராட்டத்தை கைவிட்டார் சின்ராஜ்.

போராட்டத்தை முடித்துக்கொண்ட பிறகு, இதுகுறித்து சின்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து,

"சாலை பாதுகாப்பு குழு கூட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூட்டம், மின்வாரிய கணக்குக்குழு கூட்டம் என ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். இது தொடர்பாக, பல முறை கடிதம் அனுப்பியும், ஆட்சியரிடம் இருந்து பதில் இல்லை.. போனில் கேட்டால், 'கூட்டத்தை நடத்துவதற்கு, அமைச்சர் தேதி கொடுக்க வேண்டும்' எனக்கூறி காலதாமதம் செய்து வருகிறார்.

தர்ணா போராட்டத்தில் எம்.பி சின்ராஜ்

ஆனால், நான் சொல்லும் தேதியில், ஆட்சியர் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதி. கூட்டம் நடத்தப்படாததால் பல பணிகள் தேங்கி உள்ளன. இதனால், கால்நடைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த நிதி திரும்பி சென்றுவிடும் சூழ்நிலை உள்ளது. அதனால், இந்த போராட்டத்தை நடத்தினேன்" என்று கூறினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/O58xulo
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*