ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தோல் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் பிரபலமாக செயல்பட்டுவரும் ஃபரிதா மற்றும் கே.ஹெச் ஆகிய 2 குழுமங்களுக்கு உட்பட்ட 60-க்கும் அதிகமான இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மையப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘ஃபரிதா பிரைம் டேனரி பிரைவேட் லிமிடெட்’ குழுமத்துக்குச் சொந்தமாக தோல் பதனிடுதல் மற்றும் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 10-க்கும் அதிகமாக செயல்பட்டுவருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் மட்டுமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். 25 வாகனங்கள் வந்த வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் ஆம்பூர் பகுதியிலுள்ள ஃபரிதா குழுமத் தொழிற்சாலைகளில் சோதனையில் இறங்கினர்.
அதேபோல, வேலூர் அருகேயுள்ள பெருமுகைப் பகுதியிலிருக்கும் ‘கே.ஹெச். எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். (கிளவ் டிவிஷன்)’ குழுமத்துக்குச் சொந்தமான கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 2 குழுமங்களுக்கும் சொந்தமான ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், பூந்தமல்லி, பெரியமேடு, ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலுள்ள அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஃபரிதா மற்றும் கே.ஹெச் குழுமங்கள் ஆசியா, ஐரோப்பிய ஒன்றியங்கள், ஆப்பிரிக்க நாடுகளிலும் தொழில் முதலீடு செய்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/7VDLb5J
via
