தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்குச் சிக்கலா? உண்மை என்ன?

0
தெலுங்கு பட உலகில் நிலவி வரும் ஸ்டிரைக்கினால், விஜய், தனுஷ், ஷங்கர் ஆகியோரின் படங்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளதா என்பது பற்றி விசாரித்தோம்.

ஹீரோக்களின் சம்பளம், படத் தயாரிப்பு செலவுகளைக் குறைப்பது, கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தெலுங்கு பட உலகில் காலவரையற்ற ஸ்டிரைக் நேற்று முதல் துவங்கியுள்ளது. இரண்டாவது நாளான இன்றும், அங்குள்ள சங்கங்கள் தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. விஜய்யின் 'வாரிசு', தனுஷின் 'வாத்தி', சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ஷங்கரின் 'ஆர்.சி-15' ஆகிய பட வேலைகள் அங்குதான் நடந்து வந்தன. அதிலும் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் அனைத்தையும் இயக்குவது தெலுங்குத் திரையுலகைச் சார்ந்த இயக்குநர்கள் என்பதால் இதனால் அப்படங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்து விசாரித்தோம்.

'வாரிசு' பூஜையின் போது விஜய் - ராஷ்மிகா

விஜய்யின் 'வாரிசு' படத்தைப் பற்றி சமீபத்தில்தான் சரத்குமார் பேசினார். "'வாரிசு' திரைப்படம் ஃபேமிலி டிராமானு யார் சொன்னது? அதில் டிராமா இருக்கு, ஆக்ஷன் இருக்கு, சென்டிமெண்ட்டும் இருக்கு. விஜய் சாரின் படங்களில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அதெல்லாம் 'வாரிசு' படத்தில் இருக்கும்" எனப் பேசினார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே.சூர்யா எனப் பலர் நடிக்கும் இப்படத்தை 'தோழா' வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

வாரிசு

* சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் நேற்று முதல், அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வைசாக்கில் படப்பிடிப்பு என ஷெட்யூல் போட்டிருந்தார்கள். இதற்காக ஹைதராபாத்திலேயே தங்கியிருந்தார் விஜய். நேற்று ஸ்டிரைக் அறிவித்ததினால், படப்பிடிப்புகள் நடைபெறாது எனத் தெரிவித்துவிட்டனர். இதனால் விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலில் ராஷ்மிகா, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் போர்ஷன்கள் படமாக்க இருந்த நிலையில், ஷூட்டிங் கேன்சலினால் சென்னை திரும்பியிருக்கிறார் விஜய்.

தனுஷ், சம்யுக்தா

வாத்தி

* அதைப் போல, தனுஷின் 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதமே நடந்து முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்க வேண்டியிருக்கிறது. அதையும் அவர் 'கேப்டன் மில்லர்' படத்தை முடித்துக் கொடுத்த பிறகே எடுக்க உள்ளனர் என்கிறார்கள். அதனால் தனுஷின் 'வாத்தி'க்கு சிக்கல் ஒன்றும் இல்லை என்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் பூஜையின் போது...

ஆர்.சி-15 - ஷங்கர்

* ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் 'ஆர்.சி-15' படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர், அக்டோபரில் 'இந்தியன் 2' படப்பிடிப்புக்கு மீண்டும் துவங்க இருப்பதால் கமல், காஜல் அகர்வால், ரகுல், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உட்படப் பலரிடம் தேதிகள் கேட்டிருக்கின்றனர். எனவே ஷங்கர் அக்டோபருக்குள் 'இந்தியன் 2'க்கு வர வேண்டியிருப்பதால் ராம் சரண் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு வந்து விடுவார் என எதிர்பார்த்தனர். இந்நிலையில் அங்கே ஸ்டிரைக் துவங்கியதினால் ராம் சரண் படத்தின் ஷெட்யூல் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெரியவில்லை. இதனால் 'இந்தியன் 2' மீண்டும் தாமதமாகுமா, இல்லை இந்தப் படத்தை உடனே தொடங்குவாரா என்பது குறித்தும் தகவல் ஏதுமில்லை.

பிரின்ஸ்

* சிவகார்த்திகேயன் தெலுங்கு, தமிழில் நடித்து வரும் 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்துவிட்டதால், அவரது படத்திற்கு இந்த ஸ்டிரைக்கால் எந்தச் சிக்கலும் இல்லை என்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/NZwBEYp
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*