புதுச்சேரி: குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நெருக்கம் காட்டும் தலைவர்கள்... பாஜக-வின் பதில் என்ன?!

0

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் இடம்பெற்ற நாள் முதல் குற்றவாளிகளையும், குற்றப் பின்னணி கொண்டவர்களையும் கட்சியில் இணைத்து பதவிகள் கொடுப்பது, அவர்களுடன் நெருக்கம் காட்டி நாடாளுமன்றம் வரை அழைத்துச் செல்வது என ஹாயாக வலம் வருகிறார்கள் பா.ஜ.கவின் தலைவர்களும், அமைச்சர்களும். கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை, மாநில உள்துறை அமைச்சரே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருப்பதுதான் தற்போது புதுச்சேரியில் ஹாட் டாபிக்.

உள்துறை அமைச்சரின் டிவிட்டர் பக்கத்தில் உமாசங்கர்

வழிப்பறி, பாலியல் தொழில் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர் லாஸ்பேட்டையைச் சேர்ந்த உமாசங்கர். லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.கவின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். இந்த உமாசங்கரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சரே குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை நேரில் சென்று சந்திக்கலாமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதேபோல வில்லியனூரை அடுத்திருக்கும் உளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும் கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். சில மாதங்களுக்கு முன்பு சங்கராபரணி ஆற்றில் திருட்டு மணலை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை, காவல்துறை அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் வில்லியனூரில் மடக்கிப் பிடித்தனர். அப்போது இறந்துபோன நாயை புதைப்பதற்குத்தான் மண் எடுத்துச் செல்வதாகக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் இந்த சந்திரசேகர்.

ஆளுநர், சபாநாயகருடன் சந்திரசேகர் (காவி உடை அணிந்திருப்பவர்)

மேலும் லாரியை மடக்கிப் பிடித்த வருவாய்துறை அதிகாரிகளை அடையாள அட்டையை காட்டுங்கள் என்று மிரட்டிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங். அதன்பிறகு வருவாய்துறை அந்த லாரி உரிமையாளரிடம் 10,000/- ரூபாயை அபராதமாக வசூலித்தது தனி கதை. ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வத்திற்கு அருகில் நின்றுக்கொண்டு பனை விதை நடவு செய்தார் இந்த சந்திரசேகர்.

அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் சில நேர்மையான சமூக அமைப்புகள், ”குற்றப்பின்னணி கொண்ட ஒரு நபர் ஆளுநருக்கு மிக நெருக்கமாக நிற்பதை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகளும், காவல்துறையும் அனுமதித்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு 2 கோடி ரூபாய் மோசடி வழக்கு ஒன்றில், புதுச்சேரி பா.ஜ.க பொருளாதாரப் பிரிவின் இணை அமைப்பாளரான ரமேஷைத் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அறிவித்தது ரெட்டியார்பாளையம் காவல் நிலையம்.

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன், தாதா எழிலரசியை கட்சியில் இணைத்தபோது

ரமேஷை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியோடு நேருக்குநேர் சந்திக்க வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார் புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.

கொஞ்சம் ரீவைண்டு செய்து சென்றால், புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவகுமார் படுகொலை உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய தாதா எழிலரசியை, கடந்த 2020-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடிக்கொண்டிருந்தது காரைக்கால் டி.ஆர்.பட்டினம் காவல் நிலையம்.

அதேநேரம் அவரை நேரில் சந்தித்து, பா.ஜ.க-வில் இணைத்து அரசியல் களத்தை அசர வைத்தார் அந்தக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன். அதன்பிறகு ஏற்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து அவரை நாங்கள் கட்சியில் இணைக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தது பா.ஜ.க.

அதேபோல போலி ஏ.டி.எம் அட்டைகள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த வழக்கிலும், பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் சந்துருஜி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ரௌடி சோழன்

இவரை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான கல்யாணசுந்தரமும், ரிச்சர்டு ஜான்குமாரும் 2021, டிசம்பர் மாதம் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்திக்க வைத்ததோடு, அந்த போட்டோவை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு புளகாங்கிதமடைந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். 2019-ம் ஆண்டு பிம்ஸ் மருத்துவமனை எதிரில் சந்திரசேகரன் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் சரணடைந்த அந்த குற்றவாளிகள், லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த சோழன் என்பவர் கூறியதால்தான் கொலை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

அதையடுத்து தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். லாஸ்பேட்டையில் டாப் 10 ரௌடிகளில் ஒருவரான சோழன் அப்போது பா.ஜ.கவின் வர்த்தகப் பிரிவு அணியின் தலைவராக இருந்தவர். இப்போது தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.

பா.ஜ.க தலைவர்களின் இந்த ரௌடிகள் பாசத்தால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அதேவேளையில், ”குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் இப்படி வெளிப்படையாக இவர்கள் கைகோர்த்துக் கொண்டிருந்தால் எப்படி எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் ?” என்று குமுறுகின்றனர் ஒருசில நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

இதுகுறித்து விளக்கம் கேட்க புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதனை தொடர்புகொண்டோம். ``தாதா எழிலரசியை நான் கட்சியில் இணைக்கவில்லை. நான் ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன். அது தமிழ்நாடு பகுதி. அப்போது அவரின் வழக்கு தொடர்பாக அங்கு வந்து என்னை சந்தித்தார் அவ்வளவுதான். அதேபோல மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். என் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள் என்றுகூட மத்திய அமைச்சரிடம் சந்துருஜி மனு கொடுக்க போயிருக்கலாம். அதற்கும் கட்சிக்கும் சம்மந்தமில்லை. அதேபோல உமாசங்கர் விவகாரத்தைப் பொறுத்தவரை கடந்த 5 வருடங்களில் அவர் மீது எந்த புதிய வழக்கும் பதிவாகவில்லை. ஒரு காலத்தில் குற்றவாளியாக இருந்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனந்தராமன் மீது கூடத்தான் வழக்கு இருக்கிறது’ என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் உமாசங்கர் மீது எந்த வழக்கும் இல்லை என்கிறார் பா.ஜ.க தலைவர். ஆனால் 2020-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி தமிழக பகுதியான தந்திராயன்குப்பத்தில், பாலியல் தொழிலுக்காக துணை நடிகைகளை அடைத்து வைத்திருந்ததாக உமாசங்கர், சந்துருஜி உள்ளிட்டவர்கள் மீது 3(1), 4(1), 5(1)(a), 6(1)(a) பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது (வழக்கு எண்: 978/2020) கோட்டக்குப்பம் காவல் நிலையம். அதேபோல சந்துருஜி தங்கள் கட்சியில் இல்லை என்றும் கூறுகிறது பா.ஜ.க தரப்பு. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரிக்கு வருகை தந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு நகர் முழுவதும் ராட்சத பேனர்களும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்து குறிப்பித்தக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/e27vDnT
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*