"சூர்யா - சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறேன். ரஜினி, விஜய், அஜித் டார்கெட்!"- ஆர்.கே.சுரேஷ்

0
ராமநாதபுரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்‌‌.கே.சுரேஷிடம் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு, உற்சாகத்துடன் பதில் அளித்தார்.

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் உங்களால் எப்படிப் பயணிக்க முடிகிறது?

"இது ஒரு சவாலான விஷயம்தான். ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் பிசியாகத்தான் இருக்கிறேன். இதற்கிடையே அரசியலிலும் என்னுடைய பங்காற்றி வருகிறேன். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் சில சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்."

ஆர்.கே.சுரேஷ்

கட்சியில் உங்களுக்கு உயர் பொறுப்புகள் ஏதேனும் வழங்கப்பட வாய்ப்புள்ளதா?

"பா.ஜ.கவில் இதற்கு முன்பு மாநில பொறுப்பு ஒன்றை வகித்து வந்தேன். விரைவில் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கட்சியில் மிக முக்கிய பொறுப்பு ஒன்றை எனக்கு வழங்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். அது என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்."

தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? அண்ணாமலை பா.ஜ.கவின் தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா?

"அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, தென் மாவட்டங்களில் அவருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. தமிழக முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க தலைமை அவரை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து."

தயாரிப்பாளர்கள் வீடுகளில் நடைபெறும் திடீர் 'ரெய்டுகளில்' ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கிறதா?

"தயாரிப்பாளர்கள் வீடுகளில் நடைபெறும் 'ரெய்டில்' அரசியல் பின்னணி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வருமானவரித் துறையினர் அவர்களது கடமையை செய்கிறார்கள் அவ்வளவுதான். இது 'யூஸ்வலா' நடக்கும் சோதனைதான்."

ஆர்.கே.சுரேஷ்

சினிமாவில் அடுத்து நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் படங்கள் பற்றி...

"நான் கார்த்தியுடன் நடித்த 'விருமன்' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹீரோவாகச் சில படங்கள் நடித்திருந்தாலும், தற்போதுவரை குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்ததாக 'சமீரா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளேன். இப்படத்தை சீமானிடம் உதவியாளராக இருந்த சுதாகரன் இயக்குகிறார். இதுதவிர இரண்டு வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறேன். விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'லிகர்' என்னும் பேன் இந்தியா படத்தைத் தமிழகத்தில் வெளியிடுகிறேன்."

முன்னணி நடிகர்களுடன் எப்போது இணைந்து நடிக்க உள்ளீர்கள்?

"சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அந்தப் படத்தில் நான் நடிப்பது உறுதியாகிவிட்டது. இதேபோல் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களுடன் விரைவில் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்."

சூர்யா

திரைப்படங்கள் வெளியாகும் போதும் எழும் சர்ச்சைகள் குறித்து உங்கள் கருத்து?

"ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒரு வாழ்வியல், கலாச்சாரம் என்பது உண்டு. அதுபோன்ற திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்கள் அவர்கள் வாழ்வியலை புரிந்து கொண்டு, அவர்கள் மனம் புண்படாதபடி திரைப்படங்களை இயக்கினால் சர்ச்சைகள் எதுவும் ஏற்படாது என நினைக்கிறேன்."



from தமிழ் சினிமா https://ift.tt/8TJwQ1v
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*