வேலூர் அக்சீலியம் கல்லூரி ரவுண்டானா அருகிலிருக்கும் ஆர்.பி.ஜே காம்ப்ளக்ஸ் எதிரே கடந்த மாதம் 22-ம் தேதி மாலை 6.15 மணியளவில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைப் பலனின்றி அந்த நபர் 24-ம் தேதி இறந்து விட்டார். விருதம்பட்டு போலீஸார் கொலை வழக்காக பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். இறந்த நபர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதாகும் அபனிசரணியா என்பது தெரியவந்தது.
கொலையாளிகளைப் பிடிக்க காட்பாடி டி.எஸ்.பி தலைமையில் தனிப்படையை அமைத்தும் முடுக்கிவிட்டார் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன். தனிப்படையினர் சம்பவ பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை தீவிர ஆய்வுக்குட்படுத்தினர். அதில், கொலையுண்ட வடமாநில நபர், 22-ம் தேதி மாலை 4 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வெளியில் நடந்து வருவதும், தொடர்ந்து அவர் அக்சீலியம் கல்லூரி ரவுண்டானா அருகிலுள்ள ‘கிளாசிக் பியூட்டி பார்லர்’ என்ற சலூன் கடைக்குள் செல்வதும் பதிவாகியிருந்தன.
அந்தக் காட்சிகளை தொடர்ச்சியாக கவனித்தபோது, சலூன் கடைக்குள் இருந்து 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக்கொண்டு அபனிசரணியா அலறி வெளியே ஓடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியானது. அந்த அறிக்கையில், ‘இறந்த நபர் சம்பவத்தன்று முடித்திருத்தம் செய்திருக்கலாம். அந்த சமயத்தில்தான் கூர்மையான ஆயுதத்தால் அவரின் கழுத்தில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சலூன் கடையிலிருந்த கீழ்வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் நபர் விஜயராகவன் என்பவரை சவரக்கத்தியுடன் கைதுசெய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.
கொலைக்கான காரணம்குறித்து சலூன் தொழிலாளி சொன்ன காரணம் காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாகியது. கொலைசெய்யப்பட்ட வடமாநில நபர் முடித்திருத்தம் செய்த பின்பு தன்னிடம் காசு இல்லை என்று சைகை மூலம் தெரிவித்திருக்கிறார். காசு இல்லை என்றதும் கடுப்பாகி, அந்த நபருடன் சலூன் தொழிலாளி வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றவே, கையில் வைத்திருந்த சவரக்கத்தியால் வடமாநில நபரின் கழுத்தை அறுத்துவிட்டதாக விஜயராகவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதனை பதிவு செய்து கொண்ட போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/THUNBu5
via
