ஆம்பூர் ஃபரிதா தோல் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! - காரணம் குறித்து விசாரணை

0

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு தோல்பொருள்கள் ஏற்றுமதியில் கார்ப்பரேட் வணிகம் செய்கிறது ‘ஃபரிதா’ பெருநிறுவனம். இந்தக் குழுமத்தின் தலைவர் ஃபரிதா பாபு என்ற ரஃபீக் அஹம்மது மெக்கா. வர்த்தகத்துறையில் சாதித்ததற்காக, 2011-ல் ரஃபீக் அஹம்மதுவுக்கு ‘பத்ம’ விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய வர்த்தக தொழிற்சங்கத் தலைவர், வெளிநாட்டு வர்த்தக வாரிய உறுப்பினர், ஆம்பூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் தலைவர் எனப் பெரும் சாம்ராஜ்ஜியத்தையே கைக்குள் வைத்திருக்கும் ரஃபீக் அஹம்மது, கருணாநிதி காலத்திலிருந்தே தி.மு.க-வுடன் நட்பு பாராட்டிவருபவர். கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, ஃபரிதா குழுமத்தின் அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியதும், அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்தது.

தீ விபத்து

இந்த நிலையில், ஃபரிதா குழுமத்துக்குச் சொந்தமான ஆம்பூர் சின்னவரிகம் பகுதியிலிருக்கும் காலணி தயாரிக்கும் ( PALMS UNIT) தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 6.30 மணிக்கு பணி நேரம் முடிந்து, தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காக தொழிற்சாலையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், திடீரென தீப்பற்றியிருக்கிறது. தொழிலாளர்களைக் கொண்டே தீயைக் கட்டுக்குள் கொண்டு வர அந்த நிறுவனத்தினர் முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதால், தொழிலாளர்களால் அணைக்க முடியவில்லை. தீ ஜூவாலையால், அந்தப் பகுதியே சிவந்த வானமாகக் காட்சியளித்தது. பெரும் அசம்பாவிதம் ஏற்படக்கூடிய அச்சம் நிலவியதால், நீண்ட நேரத்துக்குப் பின்னரே தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரத்தொடங்கின. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு ஒவ்வொன்றாக வந்துச் சேர்ந்தது. தீயணைப்பு வீரர்கள் விடிய, விடிய தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ரஃபீக் அஹம்மது

ஆனாலும், தீயின் தாக்கமும் வெப்பமும் அப்பகுதியை முழுமையாக சூழ்ந்திருக்கின்றன. வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகளிலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், உயர் ரக மூலப்பொருள்கள் எரிந்து நாசமாகியிருக்கின்றன. விபத்தில் சேதமடைந்த பொருள்களின் மதிப்பு குறித்து ஃபரிதா குழும நிர்வாகத்தினர், இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்த விபத்து மின்கசிவுக் காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்திருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/W1QT867
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*