கிராம மக்களைக் குறிவைத்து தீபாவளி பரிசுத் திட்டம் - பல நூறு கோடியுடன் தப்பிய வி.ஆர்.எஸ் கும்பல்!

0

திபாவளி முடிந்துவிட்டது. ஆனால், தீபாவளிக்காக தொடங்கப்பட்ட ஃபண்ட் மோசடி குறித்த செய்திகள் இப்போது வெளிவரத் தொடங்கிவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரம் ஆரணி கூட்டு ரோடு பகுதியில் `வி.ஆர்.எஸ் ஃபைனான்ஸ்’ என்ற பெயரில், தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.

இந்த நிறுவனம் `தீபாவளி’ சிறுசேமிப்புத் திட்டத்தை அறிவித்து, பணம் கட்டினால் கவர்ச்சிகரமான பரிசுகளை அள்ளித் தருவதாக விளம்பரப்படுத்தியது.

மூன்றாயிரம் ரூபாய் கட்டினால் ரூ.15,000 மதிப்பிலான பொருள்கள் வழங்கப்படும். ரூ.50,000 கட்டினால் இரண்டரை பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், இனிப்புப் பலகாரங்கள் வழங்கப்படும் என நீண்ட பட்டியலையே கொடுத்து அளந்து விட்டிருக்கிறது.

இதை நம்பி செய்யாறு மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமப்புற மக்கள் ஆயிரக்கணக்கானோர், பணம் கட்டி வந்திருக்கிறார்கள்.

மோசடியில் ஈடுபட்ட நிறுவனம்

கோடிக் கணக்கில் பணம் சேரவே, ஐ.எஃப்.எஸ், ஆரூத்ரா நிறுவனங்களின் பாணியில் ஏஜென்ட்டுகளையும் நியமித்து, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்களையும் திறந்திருக்கிறார்கள்.

இப்படி மக்களிடமிருந்து சுருட்டிய பணத்தைத் தினக்கடன், வாரக்கடன், மாதக்கடன் விட்டும் `கந்து’ வசூலிலும் இறங்கியிருக்கிறார்கள்.

தீபாவளி நெருங்கிய வேளையில், கடன் கொடுத்த பணத்தைத் திரும்ப வசூலித்துக்கொண்டு வி.ஆர்.எஸ் கும்பல் தலைமறைவாகியிருக்கிறது.

சேமிப்புத் திட்டத்துக்கான தவணைத் தேதி முடிந்த நிலையில், தீபாவளி பரிசுப் பொருள்களை வாங்குவதற்காக அந்த நிறுவனத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள், கதவுப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல் நம்பர்கள் அனைத்தும் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னரே, தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதையும், அது மோசடி நிறுவனம் என்பதையும் அறிந்து, மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதை அடுத்து, அந்த நிறுவனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசடியில் ஈடுபட்ட நிறுவனம்

இந்தத் தகவலறிந்து வந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிறுவனத்தில் பணம் போட்ட அனைவருக்கும் இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியவில்லை. இந்தத் தீபாவளி அவர்களுக்கு ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீஸார் விரைவாக விசாரணை நடத்தி, அந்த மோசடி கும்பலிடமிருந்து தங்களது பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டுமென பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அதே சமயம், அதிக வட்டி தருவதாகவும், செலுத்தும் தொகையைக் காட்டிலும் இருமடங்கு பொருள்களைத் தருவதாகவும் கூறி பணம் சுருட்டும் மோசடிக் கும்பல்கள் ஊர் ஊருக்கு கடை விரித்திருக்கின்றன. இவற்றில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனக் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை பேர் எத்தனை விதமாக நம்மை ஏமாற்றுவார்களோ..!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/buntyFW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*