இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் மூன்று நாள்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலகிருஷ்ணன்-மாலதி தம்பதியினர் இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளளனர்.
பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூத்த மகன் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளைய மகன் சிவசங்கர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்.
கடந்த வாரம் மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து ஜெபம் செய்துள்ளனர்.
உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலயே வைத்திருந்ததை பார்த்து அருகில் குடியிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரித்தபோது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், மூன்றாவது நாளாக உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்ததால் மீண்டும் போலீஸார் போய்க் கேட்டதற்கு பாலகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். அதன் பின்பு அவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசி வரவழைத்து சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு கொண்டு செல்ல வைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "பாலகிருஷ்ணன், மாலதி தம்பதியினர் இரு மகன்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி பிரார்த்தனையின் மூலமாக இறந்து போனவரை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்தது தெரிய வருகிறது" என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/5ks8a6j
via
