அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, டயர் ஓட்டும் போட்டி, பம்பரம் விடும் போட்டி என 80’ஸ், 90’ஸ் கிட்ஸ்கள் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுப் போட்டிகளை வைத்து, அந்த மாணவர்களை மகிழ்வித்திருக்கிறது ஓர் அரசுப் பள்ளி.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. கரூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கடைக்கோடியில் இருக்கும் இந்த கிராம மாணவர்களை, கல்வியில் சிறந்து விளங்க வைக்க, இந்தப் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மூர்த்தி, மற்ற ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, இந்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அதோடு, வகுப்புக்கு ஒரு மாதிரி ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அதை குறிப்பிட்டு அவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்குவது, ரூ. 30 லட்சத்துக்கும் மேல் ஸ்பான்சர்கள் மூலம் நிதி திரட்டி, பள்ளி கட்டடம் கட்டியது, வாகனம் வைத்து மாணவர்களை பள்ளி அழைத்து வருவது என்று பல முன்னுதாரண முயற்சிகளை செய்து வருகின்றனர் ஆசிரியர்கள்.
இதன்காரணமாக, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும், தற்போது இந்தப் பள்ளியில் படித்து வரும் அளவிற்கு, பள்ளியின் கட்டமைப்பை சீர்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், `ஓடி விளையாடு பாப்பா' என்று பாடிய பாரதியின் வரிகளை மறந்து, `செல்லில் விளையாடு பாப்பா' என்று செல்ஃபோனே கதி என்று இருக்கும் மாணவர்களை, 80’ஸ், 90ஸ் கிட்ஸ்கள் விளையாடிய விளையாட்டுகளை ஆட வைத்து அசத்தியிருக்கிறார்கள்.
அதுவும், குழந்தைகள் தினமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 14 - ம் தேதி மாணவர்களுக்கு பல போட்டிகளை வைத்து, அவர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்கள். டூவீலர் அல்லது சைக்கிள் டயர்களை குச்சிகளை வைத்து தட்டியபடி உருட்டி ஓட்டும் போட்டி, பம்பரம் விடும் போட்டி, பாண்டியாடுதல், கோகோ என இன்றைய மாணவர்கள் பலரும் அறியாத பல போட்டிகளை நடத்தி, அவர்களை கவர்ந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம்...
``இந்த குழந்தைகளை கொண்டாடும் தினத்தில், மகிழ்வுடன் அவர்களின் மனநிலை இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் இன்றைய மாணவர்களின் விளையாட்டு மைதானம் அலைபேசியாகவே உள்ளது. செல்ஃபோனிலேயே மூழ்கி, கண்களையும், மனதையும் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், 80’ஸ், 90’ஸ் கிட்ஸ் குழந்தைகள் புழுதியில், கண்மாய் தண்ணீரில் எனப் பல இடங்களில் புரண்டு விளையாடி களித்த இன்பம், இப்போதுள்ள மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அதைப்பற்றி தெரியவும் இல்லை. அந்த சந்தோஷ விசயங்களை அவர்கள் அறியாவண்ணம், அவர்களை செல்ஃபோன்கள் ஆக்ரமித்துவிட்டன.
அக்கால விளையாட்டு, பக்கத்து வீட்டு நண்பனுடன், தெருத்தெருவிற்கு விளையாடும் விளையாட்டு என்றால் அது டயர் வண்டி, பம்பரம் விடுதல், பாண்டியாடுதல், நுங்கு வண்டி, பட்டம் விடுதல், கோ-கோ, கபடி, பந்து சேகரித்தல் போன்ற தமிழ் கலாசாரங்களுடன் கூடிய விளையாட்டுகள் இன்றைய 2கே கிட்ஸ்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. அதனால், அவற்றை விளையாட வைக்கும் நோக்கிலும், இன்றைய குழந்தைகளிடம் கொண்டு போய் சேர்க்க நினைத்தோம். அவர்கள் விரும்பும் விளையாட்டுக்களுடன் இவற்றையும் சேர்த்து மாணவர்கள் மைதானத்தில் விளையாட வைத்து ஊக்கப்படுத்த நினைத்தோம். அதோடு, அந்த போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் அங்கீகாரம் தந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்க நினைத்தோம்.
அதற்காகத்தான், இந்தப் போட்டிகளை வைத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கியிருக்கிறோம். கவனச் செறிவை ஏற்படுத்தக்கூடிய பேப்பர் கப் பிளானர் போட்டியையும் நடத்தினோம். `உடலை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே' என்று திருமூலர் சொல்கிறார். சுவரில்லாமல் சித்திரம் வரையமுடியாது. அதனால், கல்வி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு மாணவர்களுக்கு உடல்நலமும் முக்கியம். ஆனால், ஓடி ஆட வேண்டிய வயதில், மூலையில் உட்கார்ந்து, `செல்லே உலகம்' என்று மாணவர்களின் உலகம் மங்குவதை நாங்கள் தடுக்க நினைக்கிறோம். அவர்கள் மைதானங்களில் மட்டுமே விளையாட வேண்டும் என்ற நிலை வர வேண்டும். அதனால், இப்படி தொடர்ந்து போட்டிகள் நடத்த இருக்கிறோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/GipyeYK
via
