ஆணவக்கொலைசெய்யப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட குற்றவாளிகள் 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கோகுல்ராஜின் தாயார் சித்ராவும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. மேலும் வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதிகளின் கேள்விகளுக்கு சுவாதி அளித்த வாக்குமூலம் பேசுபொருளாகியிருக்கிறது.
நீதிபதிகளின் கேள்விகளையும், அவற்றுக்கு சுவாதி அளித்த பதில்களையும் பார்க்கலாம்...
நீதிபதிகள்: கோகுல்ராஜை உங்களுக்குத் தெரியுமா?
சுவாதி: கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் பயின்றார். ஒரே வகுப்பு. சகமாணவரைப் போலத் தெரியும். அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியிருக்கிறேன்.
நீதிபதிகள்: அவர் வசதி குறைந்த வகுப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியுமா?
சுவாதி: எனக்குத் தெரியாது!
நீதிபதிகள்: 23.06.2015-ல் படிப்பு முடிந்த பின்னர், அன்று என்ன நடந்தது எனச் சொல்லுங்கள். 7 ஆண்டுகள் ஆகிவிட்டதால் நினைவிருக்க வாய்ப்பில்லை. தேவையானவற்றை நாங்கள் நினைவுப்படுத்துகிறோம்.
சுவாதி: அன்று காலை நான் யாரையும் பார்க்கவில்லை!
நீதிபதிகள்: நீங்களாக உண்மையைச் சொல்லவில்லையென்றால், அது தொடர்பான வீடியோவை போட்டுக் காண்பித்து, பொய் சொல்லியதாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு அதிகாரம் இருக்கிறது. மேலும், குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் இருக்கிறது.
சுவாதி: அந்த வீடியோவில் இருப்பது நானல்ல!
நீதிபதிகள்: வீடியோவில் அந்தப் பெண் அருகில் இருக்கும் பையன் யார்?
சுவாதி: கோகுல்ராஜ் போல் தெரிகிறது.
நீதிபதிகள்: பிறகு அந்தப் பெண் நீங்கள் இல்லையா?
சுவாதி: ஆம், நான் இல்லை. அந்தப் பெண் யாரென்றே தெரியவில்லை.
நீதிபதிகள்: உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள், நீதித்துறை நடுவர் முன்பாக வாக்குமூலம் கொடுத்தீர்களா... அந்த கையெழுத்து உங்களுடையது தானா?
சுவாதி: ஆம்!
நீதிபதிகள்: அப்போதும் சத்தியபிரமாணம் வாங்கினார்களா?
சுவாதி: ஆம்!
நீதிபதிகள்: கோகுல்ராஜை 23-ம் தேதி பார்க்கவில்லை எனக் கூறினீர்களே? வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?
சுவாதி: கோகுல்ராஜ் போனில் அழைத்து, பணம் எடுத்து வருமாறு சொன்னதால் திருச்செங்கோடு பேருந்து நிலையத்துக்குச் சென்றேன்... இதையடுத்து கோயிலுக்கும் சென்றேன் (வாக்குமூல நகலை பார்த்தி சுவாதி வாசித்தார்)
நீதிபதிகள்: இவ்வாறு நீதித்துறை நடுவர் முன்பாக எப்படி சொன்னீர்கள்?
சுவாதி: காவல்துறையினர் எழுதிக் கொடுத்து சொல்லச்சொன்னார்கள்.
நீதிபதிகள்: சத்தியபிரமாணம் செய்துவிட்டு, பொய் சொன்னீர்களா? காவல்துறை சொல்லச்சொன்னார்கள் என நீதித்துறை நடுவரிடம் சொல்லியிருக்கலாமே?
சுவாதி: அம்மா, அப்பா காவல் நிலையத்தில் இருந்ததால் பயமாக இருந்தது.
(அப்போது ஆடியோ ஒன்று நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டது)
நீதிபதிகள்: ஆடியோவில் யாருடைய குரல்?
சுவாதி: அது என்னுடைய குரல் இல்லை
நீதிபதிகள்: உங்களுடைய குரலை பதிவுசெய்து சோதனைக்காக அனுப்புவோம்.
(சுவாதி எழுதியதாக சில குறிப்புகளைக் காண்பித்து, இது யாருடைய கையெழுத்து என நீதிபதிகள் கேட்டனர்)
சுவாதி: கையெழுத்து என்னுடையது. அப்படி எழுதிக்கொடுக்கச் சொன்னார்கள்.
நீதிபதிகள்: யார் என்ன சொன்னாலும் எழுதிக்கொடுப்பீர்களா உங்களின் வாழ்வில் நடந்த எவ்வளவு பெரிய விஷயம். இது நினைவில் இல்லையா?
சுவாதி: இந்தச் சம்பவத்தின் அழுத்தம் காரணமாக மறந்துவிட்டேன்.
நீதிபதிகள்: அடையாளம் காண்பிக்க அழைத்துச் சென்றார்களா?
சுவாதி: ஆம்
நீதிபதிகள்: யாரை அடையாளம் காட்டினீர்கள்?
சுவாதி: ஒருவரைக் காண்பித்தேன். அவர் யாரென தெரியாது .
நீதிபதிகள்: அந்த நிகழ்வு குறித்துதான் உங்களுக்கு எதும் தெரியாதே, பின்னர் ஏன் அடையாளம் காட்டினீர்கள்?
சுவாதி: காவல்துறையினர் அவ்வாறு செய்யச்சொன்னார்கள். எங்கள் குடும்பத்தினருக்கு யாரும் ஆதரவு இல்லாத நிலையில், அவர்கள் சொன்னதை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீதிபதிகள்: உங்கள் போனுக்காக அளித்த மனுவில் உள்ள புகைப்படம், எண் உங்களுடையதா?
சுவாதி: போட்டோ என்னுடையது. ஆனால் செல்போன் என்னுடையது போல் இல்லை.
நீதிபதிகள்: (மனுவைக் காண்பித்து) தந்தையின் பெயர் என்னவென எழுதியிருக்கிறீர்கள்?
சுவாதி: பெரியசாமி
நீதிபதிகள்: அதிலிருக்கும் முகவரி உங்களுடையது தானா?
சுவாதி: ஆம்
நீதிபதிகள்: யுவராஜ் யாரென உங்களுக்குத் தெரியுமா?
சுவாதி: தற்போது செய்திகளில் அவர் பெயர் ஒளிபரப்பானதால் தெரியும். மற்றபடி அவர் யாரென தெரியாது.
நீதிபதிகள்: இந்த வழக்கில் உங்களுக்கு அழுத்தம் எங்கிருந்து வந்தது. காவல்துறையிடமிருந்தா? குற்றவாளிகள் தரப்பிலா?
சுவாதி: குற்றவாளிகள் தரப்பில் இல்லை. காவல்துறை சொன்னதை செய்தோம்.
நீதிபதிகள்: உங்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். அதற்கான உத்தரவை சில நாள்களில் நீதிமன்றத்தில் பெற்று விளக்கத்தைக் கொடுங்கள். நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
சுவாதி: நான் என்ன அவமதிப்பு செய்தேன் சார்?
``நீதிமன்றத்திலிருந்து உண்மையை மறைப்பதும் அவமதிப்புதான். வாழ்க்கையில் முக்கியமானது நியாயம், தர்மம், சத்தியம். உங்கள் புகைப்படத்தைப் பார்த்து, நீங்களே தெரியவில்லை என சொல்கிறீர்கள். இதை எப்படி ஏற்பது? இங்கிருப்பவர்கள் முட்டாள்களா?" என்ற நீதிபதிகள்... சிறிது நேரம் இடைவெளி எடுத்துக் கொண்டனர்.
பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ``நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாள்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தைகள்மீது சத்தியம் செய்துவிட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது என சொன்னால், இந்த நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்... நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. எது சரி, தவறு என உங்களுக்குத் தெரியும். கீழமை நீதிமன்றத்தைப் போல இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. சாட்சியாக வந்த நீங்கள் நீதிமன்றத்தை உதாசீனம் செய்யும் வகையில் பல பொய்களைக் கூறுவதை ஏற்க இயலாது.
சத்தியபிரமாணம் எடுத்த இடங்களிலெல்லாம் பொய் சொல்கிறீர்கள். காவல்துறையினர், அரசு வழக்கறிஞர்கள் மிரட்டினார்கள் என்பதைத் தாண்டி, நீதித்துறை நடுவர் முன்பாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இப்போது மிரட்டினார்கள் என்றால், நீதிமன்றத்தை விளையாட்டுப் பொருளாக நினைக்கிறீர்களா... இவற்றையும் தாண்டி நீங்கள் உண்மையை மறைத்தால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இல்லையெனில், இந்த வழக்கில் உண்மையைக் கூறுவதால் ஏதேனும் அழுத்தங்கள், பிரச்னைகள் எழுமெனில் அவற்றையாவது சொல்லுங்கள்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு சுவாதி, "எனக்குத் தெரிந்தவற்றை சொல்லிவிட்டேன்" என்றார்.
"சத்தியம் என்றைக்கானாலும் சுடும்" எனத் தெரிவித்த நீதிபதிகள், "சுவாதி, அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தொடர்ந்து வழங்க வேண்டும், காவல்துறை தரப்பிலோ, குற்றவாளிகள் தரப்பிலோ அவரை அணுகக்கூடாது" என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அன்றைய தினம் சுவாதி அளிக்கும் பதிலை வைத்து உயர் நீதிமன்றம் அடுத்த உத்தரவை அறிவிக்கும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/4rSvjZp
via
