கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு விவசாயத் தோட்டங்களில் சில நாள்களுக்கு முன்பாக 1,000 வருடம் பழைமையான சிவலிங்கங்களும், நந்தி, சண்டிகேஸ்வரர் சிலைகளும் கிடைத்தன.
தற்போது மூன்றாவது நிகழ்வாக அதே அமராவதி ஆற்றங்கரையில் 1,000 வருடப் பழைமையான சிவலிங்கமும், சிலைகளும் கிடைத்துள்ளன. இது வரலாற்று ஆர்வலர்களைப் பரவசப் படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள அரசம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாயியின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, வரலாற்று ஆர்வலர்களும், சிவனடியார்களும் அங்கு விரைந்தனர். அங்கிருந்த மண்மேட்டை அப்புறப்படுத்த, அதற்குள் 7 அடி உயர சிவலிங்கமும், நந்தி சிலையும் இருப்பதைக் கண்டனர். உடனே, அங்கேயே வைத்து அதற்கு பூஜைகள் செய்தனர்.
1,000 ஆன்டுகள் பழைமையான அந்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தினமும் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள நஞ்சைக்காலக்குறிச்சியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து, அங்கேயும் வரலாற்று ஆர்வலர்கள் சென்றனர். அங்கே 4.4 அடி உயரத்தில் ஒரு சிவலிங்கமும், சண்டிகேஸ்வரர் சிலையும் மண்ணில் புதைந்திருப்பதைக் கண்டனர்.
இதுபற்றி, பேசிய அவர்கள்,
"இப்படித் தொடர்ச்சியாக மண்ணுக்குள் புதைந்திருக்கும் சிவலிங்கங்களும், கடவுள் சிலைகளும் வெளியே வருவது அற்புதச் செயல். இந்த பகுதியானது கி.பி. 950 வரை பல்லவ பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பொதுவாக, மன்னர்கள் அனைவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்தனர். அதனால், ஒவ்வொரு கிராமத்திற்கும் கால்வாய்களை வெட்டி, விவசாயத்திற்கு நீர் ஆதாரங்களைப் பெருக்கினர். பெரிய கால்வாய்களை ராஜ கால்வாய் என்று பெயரிட்டு அழைத்தனர்.
அதேபோல், ஆற்றின் கரை ஓரமாகவோ, நீர் நிலைகளின் அருகிலோ கோயில்கள் அமைப்பதை அரசர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். அதுபோல, இவ்வூரில் ஓடும் கால்வாய்க்கு ராஜ வாய்க்கால் என்று பெயர் உண்டு. இதன் அருகேதான், தவ்வை சிற்பமும், லிங்கமும் கண்டெடுக்கப்பட்டது. இந்த லிங்கத்தின் உயரம் ஐந்தரை அடி ஆகும். தவ்வை சிற்பத்தின் உயரம் இரண்டரை அடி, நீளம் 3 அடி. பொதுவாக, பல்லவர் காலத்தில் நீர் நிலைகளின் அருகில் கட்டப்படும் சிவன் கோயிலில் தவ்வை சிற்பமும் பிரதிஷ்டை செய்வது வழக்கமாய் இருந்தது.
ஏனென்றால், தவ்வை அன்னை விவசாயத்திற்கும், மக்கள் செல்வத்திற்கும் அதிபதி. தவ்வையின் வலது புறத்தில் அவரது மகன் மாந்தனும், இடதுபுறம் மகள் மாந்தியும் இருக்கிறார்கள். இவரது வாகனம் கழுதை மற்றும் காகம். ஆயுதம் துடைப்பம். 10 - ம் நூற்றாண்டின் இறுதிவரை மிக சிறப்பாக இருந்த தவ்வை வழிபாடு பின் ஏதோ காரணத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டது.
இங்கு கிடைத்துள்ள தவ்வை சிற்பம் 9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். மிகச் சிறப்பாக இருந்த இந்த கோயிலானது கால ஓட்டத்தில் பராமரிப்பின்மை காரணமாக அழிந்து விட்டது. கரூர், திருச்சி மற்றும் கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில் நந்தி மற்றும் சிவலிங்கம் நிறுவப்பட்டு, பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களும் இதைக் கேள்விப்பட்டு ஆர்வமாக இங்கே வருகின்றனர்" என்றார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/U6TgSQE
via
