அன்புமணி Vs கடலூர் மாவட்ட நிர்வாகம்; என்.எல்.சி நில எடுப்பு விவகாரத்தில் தொடரும் பதற்றம்!

0

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு, உரிய இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென்று த.வா.க, வி.சி.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இத்துடன் தொடர்ச்சியாக பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சுரங்கம் 1 ஏ விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் நிலங்களை குறிப்பிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்.எல்.சி நிர்வாகம். ஆனால் உரிய தொகையை அறிவிக்காதவரை நிலத்தை கொடுக்கமாட்டோம் என்று போராடி வருகின்றனர் நிலத்தின் உரிமையாளர்கள். இதற்காக மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்டோர் தலைமையில் நடத்தப்பட்ட பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு என்.எல்.சி தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டிருந்த அறிக்கையில், “என்.எல்.சி இந்தியா நிறுவனம் சுரங்கம்-1, சுரங்கம்-1ஏ ஆகிய சுரங்கங்களுக்கு தேவைப்படும் நிலங்கள் குறித்து, அரசால் ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

என்.எல்.சி

இந்நிலையில் மக்களின் நீண்டகால கோரிக்கையான வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக அமைச்சர்களின் வழிகாட்டுதலில் மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் முயற்சிகளையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு என்.எல்.சி நிர்வாகம் நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பையும், உரிய இழப்பீடும் வழங்குவதற்கும் முன் வந்திருக்கிறது.

மேலும் ,வேலையில் சேர விரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.7,000/- முதல் ரூ.10,000/- வரை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மூன்று பிரிவுகளில் 20 வருடங்களுக்கு அளிக்கப்படும் இந்த உதவித் தொகையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ரூ.500/- உயர்த்தி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாதாந்திர உதவித்தொகை பெற விரும்பாதவர்களுக்கு வேலைக்கு பதிலாக, ஒருமுறை வழங்கப்படும் வாழ்வாதாரத் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மூன்று பிரிவுகளில் வழங்கப்படும். அதனால் மக்கள் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் அந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமான பா.ம.கவின் தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”என்.எல்.சியின் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று ஆசைகாட்டியிருக்கிறது கடலூர் மாவட்ட நிர்வாகம். நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள். கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை, அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ, மாத வாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அன்புமணி

50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு, சுரண்டப்பட்ட மக்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டிருப்பதும், என்.எல்.சிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களை ஆசை காட்டி ஏமாற்ற மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் தலைமையில் களமிறங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. மக்களை ஏமாற்றும் இம்முயற்சி பயனளிக்காது. என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டும்தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க முன்வராத என்.எல்.சி நிறுவனம், இப்போது எனது தலைமையில் இருமுறை போராட்டம் நடத்திய பிறகும், மக்கள் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய பிறகும்தான் இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறது. இதிலிருந்தே என்.எல்.சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இப்போதும்கூட நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 23,000-க்கும் கூடுதலான குடும்பங்களில் வெறும் 1,000 பேருக்கு மட்டுமே வேலை வழங்க என்.எல்.சி முன்வந்திருக்கிறது. அதுவும் எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலைதான்.

கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம்

 இவ்வாறு தரப்படும் வேலை அடுத்த 99 நாட்களில் கூட பறிக்கப்படக்கூடும். 50 ஆண்டுகளாக தங்களை சுரண்டிய என்.எல்.சி இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதை போல நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்கள் என்.எல்.சி மீது நம்பிக்கையிழந்து விட்டனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில்தான் அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள்தான் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இப்போது என்.எல்.சிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களின் முயற்சிகள் பலிக்காது.

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அதற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள்தான். அதிலும் குறிப்பாக நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு கூடுதல் கேட்டை விளைவிக்கும். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த, படிம எரிபொருள் பயன்பாட்டை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1,000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருகிறது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்

என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு.

இதன் மூலம்தான் கடலூர் மாவட்டத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பா.ம.க  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்.எல்.சியை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை என் தலைமையில் பா.ம.க முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/yj2OH7m
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*