நாமக்கல்: அனுமத் ஜயந்தி விழா; 1,08,000 வடைகளில் மாலை அன்பளிப்பு வழங்கும் திமுக எம்.பி & எம்.எல்.ஏ

0
நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்தையொட்டி, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிக்க வருகின்றனர். தமிழகம் முழுக்க பல ஆயிரம் பக்தர்கள் உள்ளனர். இந்த ஆஞ்சநேயர் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில், சுவாமியின் ஜயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர்

அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆஞ்சநேயரை வணங்கி, சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதோடு, கோயில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காலை ஐந்து மணியளவில் ஒரு லட்சத்து எட்டாயிரம் எண்ணிக்கையிலான வடைமாலை சுவாமிக்கு சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில், வரும் 23-ம் தேதி காலை 5 முதல் 10 மணி வரை சுவாமிக்கு வடைமாலை சாத்துபடி நடைபெறுகிறது.

அதோடு, அன்று காலை 11 மணி முதல் நல்லெண்ணெய், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், இளநீர் மற்றும் சந்தனத்தால் சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 1 மணிக்கு தங்கக் கவச அலங்காரமும், சாத்துப்படியும் நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஏராளமான பக்தர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர்

அதோடு, கோயில் நிர்வாகம் தரப்பில், 'கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்து எட்டாயிரம் வடைகளுடைய மாலை உபயத்தை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் ஏற்கின்றனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் தலைமையிலான குழுவினர் டிசம்பர் 21 முதல் அதற்காக வடை தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த வருடம் ஜயந்தி விழா வெகுவிமர்சையாக நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/r7EU4AC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*