கடலூர்: லிவிங் டுகெதர்... சிறுமி உட்பட 3 பெண்கள் மர்ம மரணம்! - கிணற்றில் மிதந்த சடலங்கள்

0

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்திருக்கும் மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது தனது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியான அவர், சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்திருக்கிறார். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார், கிணற்றில் மிதந்த சிறுமி உட்பட மூன்று பெண்களின் சடலங்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து திட்டக்குடி டி.எஸ்.பி காவ்யா தலைமையிலான போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுருநாதன், சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

மர்ம மரணம்

இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த சிவகுருநாதன், 2004-ம் ஆண்டு சென்னை போரூரிலிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது மிஸ்பா சாந்தி என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். அப்போது மிஸ்பா சாந்தியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட சிவகுருநாதன், திருமணம் செய்துகொள்ளாமலே அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அதில் மிஸ்பா சாந்தி கர்ப்பமானதால் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த விவகாரம் அரசல்புரசலாக சிவகுருநாதனின் முதல் மனைவி சுமதிக்கு தெரியவந்ததால், கணவருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்துவந்தார்.

வாக்குவாதம் பிரச்னையாக உருவெடுத்ததால் மனமுடைந்த சுமதி, கடந்த 2016-ம் ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு சென்னைக்கு சென்ற சிவகுருநாதன் மிஸ்பா சாந்தியுடன் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிவகுருநாதனுக்கும், மிஸ்பா சாந்திக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 2019-ம் ஆண்டு சொந்த ஊரான மலையனூருக்கு திரும்பினார் சிவகுருநாதன். அதன்பிறகு தனது முதல் மனைவியின் குழந்தைகள் மற்றும் தனது அம்மாவுடன் அங்கு வசித்து வந்தார். அதேசமயம் மிஸ்பா சாந்தி தனது 8 வயது மகள் மற்றும் தாய் கல்யாணியுடன் அவ்வப்போது மலையனூருக்கு வந்து சிவகுருநாதனை பார்த்துச் சென்றிருக்கிறார். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இருவருக்கும் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இல்லை.

இந்நிலையில்தான் நவம்பர் 27-ம் தேதி தனது மகள் மற்றும் தாயுடன் மலையனூர் வந்த மிஸ்பா சாந்தி, தாங்கள் இனிமேல் இங்குதான் இருக்கப்போவதாகவும், தங்களுக்கு தனியாக வீடு எடுத்து தரும்படியும் கூறியிருக்கிறார். அதனடிப்படையில் சிவகுருநாதனும் அவர்களுக்கு தனியாக வீடு எடுத்துக் கொடுத்து, அவர்களுக்கு சாப்பாடும் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறார். நேற்று 30-ம் தேதி இரவு வழக்கம்போல அவர்களுக்கு உணவு வாங்கிச் சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் அங்கு இல்லை என்றும் அவர்களை தேடிப் பார்த்துவிட்டு சிவகுருநாதன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில்தான் இன்று காலை கிணற்றில் மிதந்த மூவரின் சடலங்களையும் மீட்டிருக்கிறோம். இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.   



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JNtmH4v
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*