வேலூர், வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி, அரிசி மண்டி வியாபாரி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. 40 வயதாகும் அவரின் இளைய மகன் ராமு, தந்தைக்கு உதவியாக அரிசி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி தனது தந்தையிடம் ராமு கூறியிருக்கிறார். தந்தையோ, ‘‘உனது அண்ணனுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுக்குப் பெண் பார்த்து முடித்தப் பின்னரே உனக்குத் திருமணம்’’ என்று கூறியிருக்கிறார். இதனால், மனமுடைந்த ராமு மற்றவர்களிடம் சகஜமாக பேசுவதையும் தவிர்த்து வந்தார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் தனது வீட்டு மாடியிலுள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் ராமு. பதறிபோன குடும்பத்தினர், அவரின் உடலை மீட்டு வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிர்ப் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக ராமுவின் சடலம் அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி வேலூர் தெற்கு காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/W0xh7eK
via
