``தி.மு.க-வில் எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தவறில்லை. ஆனால் அவரை அமைச்சராக்குவதில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்ற காரணம் தெரியவில்லை. இதில் ஏதோ அவரசம் தெரிகிறது” என தஞ்சாவூரில் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரகன் தனது 60வது பிறந்தநாளை தஞ்சாவூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொண்டாடினார். நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த 60 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டிய டி.டி.வி. தினகரன் அதனை தன் கையாலேயே அனைவருக்கும் வழங்கினார். சால்வை, மலர்கொத்து கொடுத்து பலரும் தினகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார், ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான், தி.மு.க என்கிற தீய சக்தியை தேர்தலில் வீழ்த்த முடியும். பல கட்சிகளாக இருந்தாலும் ஒரணியில் இணைந்து போரிட்டால் தான் தேர்தல் என்னும் போர்களத்தில் தி.மு.க.,வை வெற்றி பெற முடியும்.
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். தி.மு.கவில் எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தவறில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் உதயநிதியை அமைச்சராக்க ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்ற காரணம் தெரியவில்லை. இதில் ஏதோ அவரசம் தெரிகிறது. இந்த அவசரத்திற்கான காரணத்தை காலம் உணர்த்தும்.
தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி. புதுச்சேரி மக்கள் அப்படி ஏமாறுவார்களா என தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் வருத்தத்தில் உள்ளனர். பழனிசாமி கம்பெனியை எதிர்த்து, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., திருந்தியிருப்பார்கள் என மக்கள் வாய்ப்பு அளித்தனர்.
விடியல் ஆட்சி என கூறினார்கள். தற்போது விடியா மூஞ்சி ஆட்சியாக உள்ளது என மக்கள் வருத்தத்தில் உள்ளனர். எனவே, புதுச்சேரியில் விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தி.மு.கவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/GYD13Wm
via
