தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க சார்பில் சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வினைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி அளித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து பேனர்கள் அகற்றப்பட்டன. கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசனின் தூண்டுதலால் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என தடைவிதித்ததாக நகர அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து வடக்கு மாவட்டச் செயலாளரான கடம்பூர் ராஜூ நேரில் வந்து போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. அகற்றப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கான பேனர்கள் அங்கு கட்டப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இடம் மாறுதலால் சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் தாமதமானது. இதில், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ``அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் விருதுகள் பெற்றது. ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலை உள்ளது. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராகப் பார்க்க வேண்டிய நிலைக்கு தி.மு.க-வினர் தள்ளப்பட்டுள்ளனர். உதயநிதி அமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சி என்பது அவருக்கு பட்டாபிஷேக விழா கிடையாது. தி.மு.க-வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா. அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என வழிவழியாக தி.மு.க-வில் மட்டும்தான் பதவிக்கு வர முடியும். தி.மு.க-வில் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது என்பதை தி.மு.க-வினரால் மறுக்க முடியுமா?
அ.தி.மு.க-வில் சாதராண தொண்டன்கூட முதல்வர் பதவிக்கு வரமுடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின்தான் தமிழக முதல்வர். அப்படி நடந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. தன்னால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை என்று தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின்தான் கூறியுள்ளார். இந்தியாவிலேயே தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனச் சொன்ன ஒரே ஒரு நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின்தான்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Zvf4yze
via
