கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அறநிலையத்துறை குறித்து பா.ஜ.க-வினர் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத கனவு கண்கிறார்கள். தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களின் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் மதத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதனை தமிழக அரசு மீட்டு எடுத்து, அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். இன்னும் பல கோயில்களுக்குச்சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மதத்தின் பெயரால் அபகரித்துவைத்திருப்பதை மீட்க நடவடிககை எடுத்துள்ளது. இது அவர்களால் பொறுத்து கொள்ளமுடியாத ஒன்று. எனவே அவர்கள் இப்படி பேசுவது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.
பா.ஜ.க ஆளுகின்ற எல்லா மாநிலங்களிலும் அறநிலையத்துறையின் கீழ்தான் கோயில்கள் இருக்கிறது. அப்படி இருப்பதில் நியாயமும் இருக்கிறது. பல கோயில்கள் நிர்வாக பிரச்னையால் பூட்டப்பட்டும், ஒரு சாராரருக்காக செயல்படுவதும், சாதாரண மக்கள் வழிபட முடியாத நிலையையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் நோக்கம் தெரியாதவர்கள் இப்படி பேசுவார்கள்.
சில காலகட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இன்று எத்தனை கும்பாபிஷேகங்கள், எத்தனை அன்னதானங்கள் நடைபெறுகின்றன. இவையெல்லாம் மக்கள் மத்தில் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கக்கூடியவர்கள் அதை பெரிய தடையாக பார்க்கிறார்கள். பா.ஜ.க எப்போதும் உண்மை பேசியது கிடையாது. குஜராத்துக்கு ஒரு நியாயம் இங்கு ஒரு நியாயம்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் பா.ஜ.க கையில் இருக்கும் மாநிலங்களில் அப்படிப்பட்ட சூழலை உருவாக்கவில்லை. இது ஒரு பேச்சு வெற்று பேச்சு.
ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டாலும் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அண்ணாமலை உண்மையை பேசியுள்ளார். அவர்கள் போட்டியிட்டால் அங்கு டெபாசிட் கூட வாங்கமுடியாது. அவர்களின் உண்மை முகத்தை வெளியே தெரியவைக்கலாம். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியே இல்லாத வெற்றியாக தி.மு.க-விற்கு இருக்கும்.
ஒரு கருத்தை சொல்வது நமக்கு இருக்கக்கூடிய உரிமை. உலகத்தரம் வாய்ந்த, புகழ்பெற்ற பி.பி.சி ஒரு டாக்குமெண்டரியை தயாரித்து வெளியிட்டுள்ளது. பா.ஜ.க உண்மையாக, நேர்மையாக இருந்திருந்தால் அதனை உலகம் முழுக்க வெளியிட வைத்து, அதன்மீது ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்து இருக்க வேண்டும். அந்த தைரியம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் தடைசெய்யும் விதத்தை பார்த்தால் நம்முடைய ஊரில் சொல்வதுபோல 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்னும் பழமொழியைத்தான் காட்டுகிறது. அவர்களுக்கு பெரியகுற்ற உணர்ச்சி இருப்பதால் தான் இந்த அளவுக்கு அடக்குமுறையை கட்டவிழ்க்கிறார்கள்.
கவர்னர் மன்னிப்பு கேட்டுவிட்டார், அமைதியாக போய்கொண்டிருக்கிறார். சனாதானத்தைப்பற்றி பேசவில்லை. நாமும் அவருக்கு வாய்ப்பூட்டுபோடவில்லை. கவர்னருக்கும் கருத்துரிமை, கருத்து சுதந்திரம் இருக்கிறது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருந்தாலும், ஜனநாயகத்தின் உச்சக்கட்ட பதவியில் இருப்பவர்கள் அந்த வரன்முறைக்கு உட்பட்டு, அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு பேசுவது நாம் வகிக்கும் பதவிக்கு அழகானதாக இருக்கும். பொதுவான உயர் பொறுப்பில் இருக்கும் யாராக இருந்தாலும், சொல்லிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/IMVfHvG
via
