`ஒரு தேங்காய், ஒரு ரூபாய் போதும்!’ - ரூ.11.50 லட்ச வரதட்சணையை திருப்பிக் கொடுத்த மணமகன்

0

திருமணம் என்றாலே வரதட்சணை இல்லாமல் இல்லை என்ற நிலைதான் இன்று வரை உள்ளது. இந்த வரதட்சணையால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தன் திருமணத்தில், அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்துகொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஹுடில் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் ஷெகாவத். இவர் தனது மகளை ராணுவ வீரர் அமர்சிங்கிற்கு திருமணம் செய்ய கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன.

மணமகனிடம் வரதட்சணை பணம் கொடுக்கும் பிரேம் சிங்

திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை பிரேம் சிங் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணைப் பணமாக ரூ. 11.50 லட்சத்தை மணமகனிடம் கொடுத்தார். அதைப் பார்த்த மணமகன், ’நான் வரதட்சணை வாங்கமாட்டேன்’ என்று கூறி அதிலிருந்து ஒரு ரூபாயையும், ஒரு தேங்காயையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மணப்பெண்ணின் தந்தை கொடுத்த வரதட்சணை பணத்தை மணமகனின் தந்தை பன்வர் சிங் வாங்கி, மீண்டும் மணப்பெண்ணின் தந்தையிடம் திரும்ப கொடுத்தார். அதை வாங்கிய அவர் கண்கலங்கினார்.

ரூ. 11.50 லட்சம் வரதட்சணையை மணமகன் திரும்பக் கொடுத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் அமர்சிங்கை பாராட்டினர். அமர் சிங் வீட்டில் மூன்று தலைமுறையாக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அமர்சிங் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக இருக்கிறார். அவரின் தாத்தா இந்தியா - பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டவர்.

இதேபோல, கடந்த மாதம் ராஜஸ்தானில் உள்ள மகரிவாடா என்ற கிராமத்தில் நடந்த திருமணத்தில் மணமகன் ஜெய்சிங்கிற்கு ரூ.1.11 லட்சம் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. அப்பணத்தில் இருந்து ரூ.11 மட்டும் எடுத்துக்கொண்டு அதை அவர் மணமகளின் தந்தையிடம் திரும்பக் கொடுத்தார்.



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*