
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அ.தி.மு.க அரசு சார்பாகக் கொண்டுவந்த தடை மசோதாவுக்கு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றம் மூலம் தடை பெற்றன. இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது தி.மு.க அரசு. முதலில் விளக்கங்களைக் கேட்ட ஆளுநர், பின்னர் அதை மார்ச் மாதம் திருப்பி அனுப்பினார். உடனடியாக மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான சட்ட மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு. இரண்டாவது முறை அனுப்பப்படும் மசோதாவைத் திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லாததால் அதற்கு ஏப்ரல் 10-ம் தேதி ஒப்புதல் வழங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி.
தமிழ்நாடு ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர் மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி தமிழக ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதே நாளில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆபத்து வராமல் என்ன செய்திட வேண்டும் என்பது குறித்து துறைசார் வல்லுநர்களிடம் கேட்டறிந்தோம்.
நீதிமன்றத்தில் தாக்குப் பிடிக்குமா?
நம்முடன் பேசிய சமூக ஆர்வலர் ஜெகதீஸ்வரன் “இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் முன்பே ஆன்லைன் ரம்மி நிறுவனத்தினர் சிலர் நீதிமன்றங்களுக்குச் சென்றுவிட்டனர். இன்னும் சட்டமே இறுதிசெய்யப்படாதபோது எதற்காக நீதிமன்றங்களை நாடினீர்கள் என்ற கேள்விக்கு, “எங்களுக்கு இப்போதே அழுத்தம் தரப்படுகிறது. ஆகவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க அனுமதிக்கக் கூடாது” எனத் தீர்ப்பு வழங்க மனு செய்தனர். ஆன்லைன் சூதாட்டம் ரத்துசெய்யப்பட்ட பின்னர் வரச்சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கின நீதிமன்றங்கள்.
தற்போது ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டார். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தற்போதே நீதிமன்ற வாசலை நோக்கி நடைபோடத் தொடங்கியிருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பினர் ஒருவேளை தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் என்ன செய்வது... என்ற ஆலோசனையை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர். ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் பிரபல வழக்கறிஞர்களை ஆஜராகும்படி செய்வார்கள். சட்ட மசோதா தயாரிக்கும்போது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது போலவே இவ்வழக்கை நடத்துவதற்கும், வாதாடுவதற்கும் கைதேர்ந்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவைத் தயார் செய்திட வேண்டும்.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்விவகாரம் விவாதிக்கப்படும்போது நீதிமன்றங்கள் மத்திய அரசைப் பதிலளிக்கும்படி சொன்னால் மத்திய அரசின் நிலைப்பாடும் அவசியம். இத்தனை பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப்பெற்ற ஒப்புதல்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிப்பது கேள்விக்குறியாகலாம்” என்கிறார் அவர்.
தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
நம்முடன் பேசிய சைபர் பிரிவு வழக்கறிஞர் கார்த்திகேயன், ``ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் ஆன்லைன் சூதாட்டங்கள் விளையாட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தில் இன்னும் சில வாய்ப்புகள் மிச்சம் இருக்கிறது. பழைய தீர்ப்புகளைப் புரட்டிப் பார்த்தோமேயானால் அவை அனைத்துமே ஆன்லைன் கேமிங்க் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
தற்போதைய விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கலாம் எனக் கேட்டால்... தமிழக அரசுக்குச் சாதகமாகவும் தீர்ப்பு வரலாம். அதே சமயம் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் தீர்ப்பு வரலாம். தற்போது ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கும் மசோதாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கும் மக்களுக்கு மட்டுமே. முதலில் கேமிங்க் கம்பெனி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும், ஒருவேளை தமிழ்நாடு அல்லாத வேறு இடங்களில் செயல்பட்டால் அதற்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது.
தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழகம் அல்லாத இடங்களில் இயங்கும் நிறுவனத்தின் ஆன்லைன் சூதாட்டத்தைப் பயன்படுத்த இயலும். அதைத் தடுக்க ”ஜியோ பென்சிங்” மூலம் தமிழகத்தில் நிலப்பரப்புகளில் டவுன்லோடு மற்றும் பயன்படுத்த முடியாதபடி செய்யலாம். ஆனால், அதற்கு மத்திய அரசின் அனுமதியும் முன்னெடுப்பும் மிக அவசியம். தொழில்நுட்பத்துறையைக் கையாளும் அமைச்சரவை கூகுள், ஆப்பிள் நிறுவனங்களிடம் பேசி தமிழகப் பகுதிகளில் இயங்கவிடாமல் செய்யலாம். அதுவரை பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும். ஆனால், விளையாடுபவர்கள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
இப்போது யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்ற தகவல்களை எப்படி தமிழக அரசு திரட்டும்... என்பது பெரும் கேள்வி. இந்த சட்டத்தினால் ஆன்லைன் சூதாட்ட ஆப்களை பயன்படுத்துவது அரசுக்குத் தெரிந்தால் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்ற அச்சத்தில் மக்கள் பயன்படுத்தாமல் போக வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தவிர தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டைத் தடுக்க `ஜியோ பென்சிங்’ அவசியம்” என்கிறார் அவர்.
from விகடன்
umn news
