``இது ஒன்றும் புதுவை அரசின் மருத்துவமனை அல்ல'' - ஜிப்மர் விவகாரத்தில் கொதித்த ரவிக்குமார் எம்.பி

0

ஜிப்மர் மருத்துவமனை விவகாரம் குறித்து நேற்று மாலை விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார். அப்போது பேசிய அவர், "ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தைக் கொச்சைப்படுத்தி புதுவை துணைநிலை ஆளுநர் அவர்கள் கருத்து கூறியிருந்தார். அதில் நான் பங்கேற்றதற்காக, 'விழுப்புரம் எம்.பி-க்கு இங்கென்ன வேலை' என்று கூறியிருந்தார். 

துரை.ரவிக்குமார் எம்.பி

நேற்றைய தினம் அவர் தன்னுடையக் கருத்தை மாற்றிக்கொண்டு, 'ஜிப்மர் மருத்துவமனை சிறப்பாகச் செயல்படுகிறது. நோயாளிகளுக்கு இடையூறு தருகின்ற விதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத்தான் நான் எதிர்த்தேன்' எனச் சொல்லியிருக்கின்றார். அவர் கருத்தை மாற்றிக்கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதாவது அவருக்கு நல்ல தெளிவு வந்திருக்கிறது எனக் கருதுகிறேன். அதற்கு முன்தினம், ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் அந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிக் கொடுத்திருக்கும் விபரங்கள், உண்மையை மறைக்கும் விதமாக இருக்கிறது. 

2019-ம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு 3.30 கோடி ரூபாய் மட்டும்தான், மத்திய பட்ஜெட்டில் உயர்த்தி வழங்கினார்கள். அதாவது 2018 - 19ல் 1096.70 கோடியாக இருந்த நிதி 2019 - 20-ல் 1100 கோடியாக உயர்த்தப்பட்டது. இது குறித்து நான் கேள்வி எழுப்பியபோது, கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.120 கோடியை ஜிப்மர் நிர்வாகம் செலவு செய்யாமல் இருந்தது தெரியவந்தது. ஏன் இவ்வளவு தொகை செலவிடப்படாமல் இருந்தது என்றும், மற்ற தற்சார்பு அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை விட ஜிப்மருக்கு குறைவாக ஒதுக்கப்படுவது குறித்தும் நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அதன் விளைவாக அடுத்த ஆண்டில் நிதி உயர்த்தப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், 2020 - 21 நிதி ஆண்டிலும் நிதி உயர்த்தப்படாமல் சுமார் 100 கோடி ரூபாயைக் குறைத்து ஒதுக்கினார்கள்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

அதே சமயம், டெல்லியில் எய்ம்ஸ், சண்டிகர் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை உயர்த்தி வழங்கினார்கள். இது பற்றிய நிதி அமைச்சரின் கவனத்திற்கு நான் கொண்டு சேர்த்ததின் விளைவாக, 2022 பட்ஜெட்டில் ரூ.1340 கோடியாக ஜிப்மருக்கு நிதி உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1490 கோடியாக அந்த நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஜிப்மர் நிர்வாகத்தின் இயக்குநர் சொல்லியிருப்பது யாதெனில்... "2018 - 19 நிதியாண்டில், ஜிப்மர்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட, இப்போது ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதி 500 மடங்கிற்கு மேல் அதிகமானது. வேறெந்த மருத்துவமனைக்கும் பிரதமர் இவ்வளவு நிதியை ஒதுக்கவில்லை" என்றெல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆனால் அது உண்மையே அல்ல. எய்ம்ஸ் மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் 2016-ல் ரூ.2288 கோடியாக ஒதுக்கப்பட்ட நிதி, வருடம் தோறும் உயர்த்தப்பட்டு இந்த வருடம் ரூ.4134.67 கோடியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு ஏறத்தாழ ஜிப்மரை விட 500 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதே சமயம், ஜிப்மர் மருத்துவமனை அரசு ஒதுக்கீடு செய்யும் பணத்தை கூட ஒழுங்காக செலவிடுவது கிடையாது. அதனால்தான் முதலிலேயே நிதி குறைக்கப்பட்டது. அதைப் பற்றி நான் கேள்வி எழுப்பிய பின்னர்தான், முறையாக அந்தப் பணத்தை செலவு செய்கிறார்கள். இதற்கிடையிலே 63 வகையான பரிசோதனைகளை செய்வதற்கு ஜிப்மர் நிர்வாகம் பல்வேறு கட்டணங்களை நோயாளிகளிடம் இருந்து பெறுவதற்கு அறிவிப்பு செய்திருந்தது.

ஜிப்மர் - வி.சி.க ஆர்ப்பாட்டம்

இது தொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளரிடம் நாங்கள் விசாரித்த போது, "உங்கள் செலவுக்கான தொகையை நீங்களே அங்கிருந்து சம்பாதித்துக் கொள்ளவேண்டும்" என்று மத்திய அரசு கூறியதாகத் தெரிவித்தார். மேலும், "அதனைச் செய்ய எங்களுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கிறது. ஒன்று மாணவர்களிடத்திலிருந்து வசூலிக்க வேண்டும். இல்லையெனில் நோயாளிகள் இடத்திலிருந்து வசூலிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கட்டணத்தை வசூலிக்கிறோம்" என்று தெரிவித்தார். 

இதன் மூலம் இவர்கள் குறைவான தொகையைத்தான் ஈட்ட முடியும் என்றாலும், இவர்கள் செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகின்ற தொகையை முறையாகச் செலவு செய்தாலே இந்த கட்டணத்தைத் தவிர்த்து, இலவசமாக அனைத்து சிகிச்சைகளையும் பொதுமக்களுக்கு வழங்கிட முடியும். ஜிப்மர், மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கும் பொதுவான அரசு மருத்துவமனை.

இதில் கட்டணம் வசூலிக்க ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பல கட்ட போராட்டம் நடத்திய பின்னரும், `ஜிப்மரில் கட்டணத்தை ரத்து செய்வோம்' என்று துணைநிலை ஆளுநரோ, ஜிப்மர் இயக்குநரோ இதுவரை சொல்லவில்லை. உண்மைக்கு மாறான தகவல்களைப் புதுவை துணை நிலைய ஆளுநர் மற்றும் ஜிப்மர் இயக்குநர் சொல்லி, இந்த கட்டண சுமையை நியாயப்படுத்துவது கொஞ்சமும் சரியில்லை.

'ஜிப்மர் மருத்துவமனை பற்றி விழுப்புரம் எம்.பி ஏன் பேசுகிறார்' என்று தமிழிசை அவர்கள் கேட்டிருக்கிறார். ஜிப்மர் மருத்துவமனை ஒன்றும் புதுவை அரசின் மருத்துவமனை அல்ல. அது மத்திய அரசின் மருத்துவமனை. எனவே, எந்த மாநிலத்தவரும் அங்கு சிகிச்சைபெற உரிமை இருக்கிறது. அந்த வகையிலே விழுப்புரம் மக்கள்தான் அதிகமாக அங்குச் சிகிச்சை பெறுகிறார்கள்.

துரை.ரவிக்குமார் எம்.பி

எனவே, அந்த மக்களின் சார்பாக நான் பேசினேன். ஜிப்மர் மீது எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. இந்த மருத்துவமனையைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் எங்களுடைய கடமை பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம். இதற்குப் புதுவை துணைநிலை ஆளுநரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தெலங்கானா ஆளுநராகவும், புதுவையில் தற்காலிக ஆளுநராகவும் வலிமையோடு இருக்கும் அவர், பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார்.

அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கிடப் பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், அவர் இந்த கட்டண விதிப்பை நியாயப்படுத்துவது சரியில்லை. 'சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்வதற்கு மக்கள் எங்களுக்கெல்லாம் வாய்ப்பு அளிக்கவில்லை' என்று தமிழிசை அவர்களை வருத்தப்பட்டிருக்கிறார். அப்படியிருக்க, இன்று புதுவையிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது, அதற்காக முதலமைச்சரும் இருக்கிறார். அவர் ஜிப்மர் விவகாரத்தில் பதில் சொல்லலாம், கருத்து கூறலாம். 

தமிழிசை செளந்தரராஜன்

ஆனால், புதுவை துணைநிலை ஆளுநரான இருக்கும் தமிழிசை, ஒரு நிழல் முதலமைச்சராகச் செயல்படுவது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பதாக இருக்கிறது" என்றார் காட்டமாக.

இந்த நிலையில் ஜிப்மரில், பரிசோதனைகளுக்காக அறிவிக்கப்பட்ட கட்டணத்தை, ஜிப்மர் நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்துவதாக, இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. (ரவிக்குமார் எம்.பி பேட்டி கீழே உள்ள வீடியோ பதிவில்)



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*