``ஸ்டாலின் ஒரு திறமையற்ற பொம்மை முதலமைச்சர்” - விளாசிய எடப்பாடி பழனிசாமி

0

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு சிலை திறப்பு விழா மற்றும் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு வந்திருந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 60 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 9 பேர் இறந்துள்ளனர். மேலும் பலபேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் பலர் கண்பார்வை இழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

எடப்பாடி பழனிசாமி

இன்னும் எத்தனை உயிரிழப்பு ஏற்படுமென்ற அச்சத்தில்  சிகிச்சையில் உள்ளவர்களின் குடும்பத்தினரும், உறுப்பினர்களும் பயந்துபோய் இருக்கிறார்கள். அதேபோல, செங்கல்பட்டு அருகே போலி மதுபானம் அருந்தியதன் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த செய்திகள் அனைத்தும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தினாலே, இப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் மக்கள் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கள்ளச் சாராயம் பெருகியுள்ளது என சட்டமன்றத்திலே நான் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசியிருக்கிறேன். இதையெல்லாம் அரசாங்கம் சரியான முறையில் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆகவே, ஸ்டாலின் தார்மீகமாக அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், “ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தமிழகம் முழுவதும் எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டிஜிபி அவர்கள் கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக 2.0, 3.0, 4.0 என்று அறிவித்திருக்கிறார். இப்படி ‘ஓ’ போடுவது தான் வழக்கமாக இருக்கிறதே ஒழிய, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய முடியவில்லை.

தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடை திறந்திருக்கிறது. ஏகப்பட்ட வருமானம் வருவதால் போலி மதுபானம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தை வைத்து மதுபானம் விற்பனை மற்றும் திருமண மண்டபத்தில்  மதுபானத்திற்கு அனுமதி என மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக ஸ்டாலின் அரசாங்கம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியார் ஆலையில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, இரவு நேரத்தில் அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதில் 4  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.



from விகடன்
umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*