``கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க தோற்றிருக்கிறது. மக்கள் முடிவு எதை உணர்த்துகிறது?”
``ஒரே கட்சி தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்ததில்லை என்பதுதான் கர்நாடகாவின் 35 ஆண்டுகால வரலாறு. பா.ஜ.க-வின் வாக்கு வங்கி குறையவில்லை என்பதால், இது அரசியல் ரீதியான தோல்வி இல்லை. ஆனால் பா.ஜ.க ஆட்சியை இழந்தது வருத்தம்தான்.”
“ஆனால் சீனியர்கள் பலரே தோற்றிருக்கிறார்களே? அதை எப்படிப் புரிந்துகொள்வது?”
“தேர்தல் அரசியலில் எப்போதும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கும். காமராசரே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் என்ன வேண்டுமானால் நிகழும்”
``அப்படியானால் தோல்வி அதிருப்தி இல்லையா? சர்ப்ரைஸா?”
“ஆமாம். பலமுறை வெற்றி பெற்றவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். புதுமுகங்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் மனநிலை மாறியிருக்கிறது என்றுதான் பார்க்கிறேன். இதில் அதிருப்தி இல்லை.”
“பொம்மை அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை பா.ஜ.க தலைமை அலட்சியப்படுத்தியதும் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறதே?”
“பா.ஜ.க மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் தோல்வியை சந்தித்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது, இப்போதைக்கு செய்யும் அரசியல் அவ்வளவுதான். அவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் மட்டுமே.”
“ஹிஜாப் சர்ச்சை தொடங்கி இஸ்லாமியர் இடஒதுக்கீடு வரை பா.ஜ.க முன்னெடுத்த மத அரசியலுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் என காங்கிரஸ் கூறுகிறதே?”
“மைக்ரோ லெவல் அனாலிஸிஸ் பண்ணினால்தான் சுய பரிசோதனை செய்துகொள்ள முடியும்.”
“அவையெல்லாம் தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்கிறீர்களா?”
“அவை எதிரொலித்திருந்தால் காங்கிரஸ் ஸ்வீப் செய்திருக்க வேண்டுமே? ஆனால் அப்படி நடக்கவில்லையே?”
“வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை அண்ணாமலை எல்லாவற்றிலும் பங்களிப்பைக் கொடுத்திருந்தார். அதை எப்படிப் பார்க்கறீங்க?”
“அவருடைய பணி மெச்சத்தக்கதாகவே இருந்தது. பலரை தேர்தல் களத்தில் இறக்கி, நுணுக்கமாக வேலைகளைச் செய்தார். தலைமைத்துவ தரத்தை அதிகரிக்கும் ஒரு நல்ல வாய்ப்பை பா.ஜ.க மேலிடம் அவருக்கு வழங்கியது. தமிழர்கள் வாழும் பகுதியில் பா.ஜ.க-விற்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது.”
“ஆனால் அண்ணாமலையால் தங்களுக்கு 10-20 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கிறது என சசிகாந்த் செந்தில் கூறுகிறாரே?”
“(சிரிக்கிறார்...) அரசியல் ரீதியாக எது லாபமோ அதைத்தான் பேசுவார்கள். 40 இடங்கள் தோற்றிருக்கிறோம். அங்கு யாரெல்லாம் சென்றார்களோ அவர்கள்தான் தோல்விக்கு காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? பச்சையாக ஒரு உண்மையைப் பேசுவோம். ராகுல் காந்திதான் காங்கிரஸ் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள். ஒரு ஏழெட்டு தொகுதிகளில் ஜாலி வாக் போய்விட்டு வந்தார். அதுதான் வெற்றிக்கு காரணம் என்றாகிவிடுமா?”
``ஆனால் பாரத் ஜோடோ நடைபெற்ற பகுதிகளில் காங்கிரஸ் அதிகம் வெற்றி பெற்றிருப்பது உண்மைதானே?”
“ஆமாம். ஆனால் அந்த நடைபயணம் எத்தனை நாள்கள் நடந்தன? எத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டார்கள்? இந்த தேர்தலுக்கும் அந்த நடைபயணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வெற்றிகிடைத்துவிட்டது, அதை யாருக்கு வேண்டுமானாலும் கிரெடிட் கொடுத்துக்கொள்வார்கள், அதேபோல இவர்களால்தான் பா.ஜ.க தோற்றது என்றும் யாரை வேண்டுமானால் கை நீட்டலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, அவ்வளவுதான்.”
“அப்படியானால் அண்ணாமலை மீதான விமர்சனம் வெறும் அரசியல் ஸ்டண்டா?”
“ஆமாம். வேண்டாத தலைவர்களை அவமானப்படுத்துவதற்கும், வேண்டிய தலைவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொள்வதற்கும் இந்த வெற்றியை பயன்படுத்துவார்கள்.”
“நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வெற்றி எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் பேசுகிறதே?”
“நிச்சயமாக காங்கிரஸ் அப்படித்தான் பேசும். பேச வேண்டும். மூச்சுப் பேச்சில்லாமல் ஐ.சி.யு-வில் கிடக்கும் காங்கிரஸுக்கு கர்நாடக வெற்றி ஆக்ஸிஜன் கொடுத்திருக்கிறது. அதைவைத்து எவ்வளவு அரசியல் செய்ய முடியுமோ அதை செய்வார்கள். ஆனால் அது வெற்றியைத் தருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.”
“எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும்போது அதற்கு வாய்ப்பு ஏற்படலாமே?”
“அதற்கு வாய்ப்பே இல்லை. பா.ஜ.க-வை அழிக்க வேண்டுமென்று பல எதிர்க்கட்சிகள் விரும்பினாலும், அதற்கு ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. ஏனென்றால் ராகுல் காந்தி ஒரு விளையாட்டுப் பிள்ளை. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருக்கு பிரதமராக வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது.”
“எதிர்க்கட்சிகள் இணைய மாட்டார்கள் என்கிறீர்கள், ஆனால் மம்தா பானர்ஜி காங்கிரஸ் வெற்றிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறாரே? இணக்கத்திற்கு தயாராகிறார் என்றுதானே அர்த்தம்?”
“மம்தா பானர்ஜி அரசியலில் ஒரு நம்பகத் தன்மையற்ற தலைவர். இன்று பேசியது நாளை இருக்காது. மேற்கு வங்கத்திற்கு வெளியே எங்கேயும் அவருக்கு இருப்பு கிடையாது. ஒரு மாநில முதல்வர் என்பதால் விளம்பரத்திற்கு எதையாவது பேசுவார்.”
“திராவிட நாட்டில் இருந்து பா.ஜ.க வெளியேற்றப்பட்டுவிட்டது என ஸ்டாலின் காட்டமான அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?”
“அது வெறும் எதுகை, மோனைப் பேச்சு. திராவிட நாடு என்பது எது? அந்த திராவிட நிலப்பரப்பில் தி.மு.க எங்கெல்லாம் இருக்கிறது? திராவிட நாடு என்பது திராவிட மாயை. இல்லாத ஒன்றைச் சொல்லி அதற்கு விளக்கமும் கொடுப்பது தி.மு.க-வுக்கு கை வந்த கலை.”
“எதுகை, மோனைப் பேச்சாக இருந்தாலும் தென்னிந்தியாவில் இப்போது பா.ஜ.க இல்லை என்பது உண்மைதானே? ஒரு பலமான தேசியக் கட்சிக்கு இது பின்னடைவு இல்லையா?”
“தென்னிந்தியாவில் பா.ஜ.க இல்லை என்பது உண்மை. கர்நாடகாவைத் தாண்டி வேறு எந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சியில் இல்லை என்பதும் உண்மை. ஆனால் வாக்கு வங்கி, பூத் கமிட்டி, சட்டமன்ற பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். கர்நாடகாவில் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறோம். ஆந்திராவில் மட்டும்தான் தொய்வு இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும்.”
“dmk files இரண்டாம் பாகம் வெளியாகும்போது மற்ற ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாமா?”
“கையில் இருக்கும் ஆவணங்களை இப்போதே காற்றில் பறக்க விட முடியாது. வெறும் பெயருக்காக, அரைகுறையான அரசியலை இதில் நாங்கள் செய்யவில்லை. முழுமையான ஊழல் பட்டியலை வெளியிடுவோம். உங்கள் கேள்வியின் உள் அர்த்தம் எனக்குப் புரிகிறது. ஊழல் யார் செய்திருந்தாலும் வெளியிடுவோம். ஆனால் அது எப்போது என்பதைப் பார்த்துதான் செய்வோம். சொல்லிவிட்டோம் என்றும் உடனே தடலாடியாக செய்ய மாட்டோம். தமிழகத்தில் ஆண்ட கட்சிகளின் உண்மை முகம் மக்களுக்கு தெரிய வரும். அப்போது பா.ஜ.க-தான் மாற்று என்று மக்கள் புரிந்துகொள்வார்கள்”
“ஏற்கெனவே ஆண்ட கட்சியோடுதான் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்?”
“கூட்டணி என்றால் கொத்தடிமைகள் அல்ல. கூட்டணி என்பதற்காக அவர்கள் அணியும் சட்டை, வேட்டியை நாங்களும் அணிய முடியாது. அவர்களின் லட்சியம், கலாசாரம், கொள்கைகள் வேற, வளர்ப்புமுறைகள், சிந்தனைகள் வேற. ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இணைந்திருக்கிறோம். தேர்தல் வரும்போது மட்டும்தான் கூட்டணி. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வேறு வேறுதான். கூட்டணி என்பதற்காக உண்மைகளை உரக்கச் சொல்லாமல் மவுனம் காக்க முடியாது.”
“ஒரு கட்சியின் ஊழல் பட்டியலை வெளியிட்டுவிட்டு, அந்த கட்சியோடே எப்படி கூட்டணி வைப்பீர்கள்?”
“அந்த காலம் வருகிறபோது இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன்."
from விகடன்
umn news
