
கர்நாடகாவில், பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குறித்து, பட்டிதொட்டியெல்லாம் தெரியும். அந்த அளவுக்கு கர்நாடகத்தில், பெல்லாரி பகுதியில் சுரங்கத் தொழிலில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திவருகிறார். 2016-ல் மகளுக்கு, 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்துவைத்து, நாட்டையே அதிரச்செய்த இவர், சுரங்க ஊழல், நிதி மோசடி வழக்குகளில் தொடர்பில் இருந்ததற்காக, மத்திய குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதன்பின், பெயிலில் வந்த அவருக்கு, அவரது சொந்த ஊரான பெல்லாரி தொகுதிக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
கைதான பின், பா.ஜ.க மேலிடத்தில் தன்செல்வாக்கை இழந்த ஜனார்த்தன ரெட்டி, ‘பா.ஜ.க-வில் தனக்குப் போதிய மரியாதை இல்லை’ எனக் கூறி, பா.ஜ.க-வுடனான, 20 ஆண்டுக்கால நட்பை முறித்து கடந்த, டிசம்பர் மாதம், ‘கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா – கே.பி.பி.ஆர்’ என்ற தனிக்கட்சி தொடங்கியிருந்தார். ‘பா.ஜ.க-வை வீழ்த்துவதே என் எண்ணம்’ எனக் கூறிய ஜனார்த்தன ரெட்டி, கோப்பல் மாவட்டம், கங்காவதி தொகுதியில் களமிறங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், தன் மனைவி கலி லட்சுமி அருணாவை பெல்லாரி தொகுதியில் போட்டியிட வைத்தார். மொத்தமாக ஜனார்த்தன ரெட்டி கட்சியைச் சேர்ந்த, 47 பேர் போட்டியிட்டிருக்கின்றனர்.
பா.ஜ.க மீதிருந்த அதிருப்தியில், அதிதீவிர பிரசாரம் செய்த ஜனார்த்தன ரெட்டி, தங்கள் கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்காளர்களை நன்கு ‘கவனித்து’ வாக்குச் சேகரித்து வந்தார். ரெட்டியின் ‘கவனிப்பால்’ தொகுதிகளில் வழக்கத்தைவிட அதிக ‘பண மழை’ பொழிந்த நிலையில், கங்காவதியில் போட்டியிட்ட ஜனார்த்தன ரெட்டி, 65,791 ஓட்டுகள் பெற்று, 8,266 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் மொத்தம், 62 பேர் போட்டியிட்ட நிலையில், ஜனார்த்தன ரெட்டி முதலிடமும், காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் அன்சாரி இரண்டாமிடமும், பா.ஜ.க வேட்பாளர் பரன்ன ஐஸ்வரப்பா முனவள்ளி மூன்றாமிடம் பெற்றிருக்கின்றனர். அவரின் கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததுடன், அவரின் மனைவியும் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறார்.
பா.ஜ.க-வில் இருந்தபோது, `ஹைதராபாத் கர்நாடாக' என அழைக்கப்படும், கல்யாண கர்நாடகாவில், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜனார்த்தன ரெட்டி, தனிக்கட்சி தொடங்கியதும், ‘டார்கெட் கல்யாண கர்நாடகா’ என்ற திட்டத்துடன், ஏழு மாவட்டங்களைக்கொண்ட கல்யாண கர்நாடகாவில் அதிதீவிர பிரசாரம் செய்து வந்தார். இப்படியான நிலையில், தனிக்கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே ஜனார்த்தன ரெட்டி வெற்றி பெற்றிருப்பது, அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
from விகடன்
umn news
