
பார்பி படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தலும் பார்பியே இருக்கிறது. பார்பி படம் முழுவதும் பெண்ணிய சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஆனால், இதன் கதாநாயகி பார்பி ஒரு பெண்ணிய சின்னம் அல்ல பெண்ணியவாதிகளால் எதிர்க்கப்பட்ட ஒரு சின்னம் தான் பார்பி. பார்பியை எதிர்த்த பெண்ணியவாதிகளை பார்பியின் பி.ஆர் பூஸ்டர்களாக மாற்றிவைத்து பார்பியை ரீ-ப்ராண்ட் செய்தது தான் பார்பி படத்தின் இயக்குநர் க்ரெட்டாவின் சாதனை.
இப்போது பரபரப்பாகப் பேசப்படும் பார்பி உருவானது 1959. சந்தையில் குழந்தைகள் விளையாடுவதற்காக குழந்தை போன்ற பொம்மைகளே இருந்த காலம் அது. ஒரு நிஜ பெண் போலவே இருக்கும் பார்பி பொம்மையை மட்டேல் நிறுவனம் வெளியிட்டது அப்போதுதான். பொம்மை மார்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது பார்பி பொம்மை. வெளியான முதல் வருடத்திலேயே 3 லட்சம் பொம்மைகள் விற்பனை ஆகின. தற்போது மட்டேல் நிறுவனம் பில்லியனுக்கும் மேல் பார்பிகளை விற்றிருக்கிறது. அன்று முதல் இன்று வரை உலகெங்கிலும் இருக்கும் சிறுமிகள் விரும்பி விளையாடும் பொம்மையாக இருக்கிறது பார்பி. இந்த பார்பியை உருவாக்கியவர் ருத் ஹண்ட்லர்.
பார்பியின் இன்ஸ்பிரேஷன் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த `பில்ட்-லில்லி' பொம்மைதான். இந்த பொம்மை வயது வந்தோர்க்காக விற்கப்பட்டு வந்தது. அதைச் சிறுமிகளுக்கு விற்பனை செய்யும் யோசனை ருத்க்கு வந்ததற்குக் காரணம் அவரின் மகள், பார்பரா. பார்பரா அவளது பொம்மைகளுக்கு முதிர்ந்தோர் வேடம் தந்து விளையாடுவதைப் பார்த்துத் தான் ருத் ஒரு வளர்ந்த பெண்ணின் பொம்மையைக் குழந்தைகளுக்காக உருவாக்கினர். அந்த பொம்மைக்கு தன் மகளின் பெயரையே சூட்டினார்.
ஆனால் இந்த யோசனை வேலைக்காகும் என்று மட்டேல் நிறுவன தலைமை அதிகாரிகள் யாரும் எண்ணவில்லை. அவர்கள் எண்ணத்திற்கு மாறாக பார்பி பெரும் லாபத்தை ஈட்டியது. பார்பி பணத்துடன் சேர்த்து பெண்ணியவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தது.
70-களில் பெண்ணியவாதிகள் பார்பிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினர். அவர்கள் சில கருத்துகளையும் முன்வைத்தனர். பார்பி சிறுமிகளிடையே அவர்கள் உடல் பற்றிய நச்சு மிக்க ஒரு உருவத்தை உண்டாக்கியது. பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் இடுப்பு சைஸ் ஸீரோவில் இருக்க வேண்டும், நீல கண்கள் வேண்டும், வெளிர் தோலும் கூந்தலும் வேண்டும், இதெல்லாம் இருந்தால் தான் அழகு என்ற கற்பிதத்தைக் கொண்டு வந்தது பார்பி. குழந்தைகள் விளையாடும் பொம்மை தானே எப்படி இருந்தால் என்ன என்று அலட்டிக்கொள்ளாமல் கடக்கும் விஷயமல்ல இது. சிறுவர்களிடையே பார்பி போல் இருக்க வேண்டும் என்று உண்ணாமல் eating disorder உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இன்னும் ஒரு படி மேல் போய் பார்பி போல உடலமைப்பை மாற்றி காஸ்மடிக் சர்ஜரி செய்பவர்கள் கூட உண்டு. உடல், அழகு பற்றிய ஒரு சாத்தியப்படாத சித்திரத்தைப் பக்குவம் இல்லாத சிறு பிள்ளைகளின் மனதில் வரைகிறது பார்பி.
பார்பியின் உடலமைப்பில் ஒரு நிஜ பெண் இருக்கவே முடியாது. பார்பியின் இடுப்பு ஒரு நிஜ பெண்ணிடம் இருக்க வேண்டுமென்றால் குடல் கருப்பை போன்ற உறுப்புகளை உருவி வெளியே வைத்தால் தான் உண்டு.
பார்பி குழந்தைகளுக்கான பொம்மையாக இருந்தாலும், ஒரு ஆண் மைய சமூகத்தால் ஆண் பார்வைக்காகப் படைக்கப்பட்டது போலவே பார்பியின் உருவமைப்பு உள்ளது. ஆண் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் `gi joe' போன்ற பொம்மைகள். அவை பொம்மைகள் அல்ல `ஆக்ஷன் பிகர்கள்' எனச் சொல்லப்படுகின்றன. அவை போர், மீட்புப் பணிகள் என ஏதாவது செய்யும்போது, பார்பி பொம்மையை அழகாக அலங்கரித்து வைத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் அழகாக இருப்பது தாண்டி பெண்கள் செய்யவேண்டியது எதுவுமில்லை. இப்படி பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
90-களில், `கணக்கு கடினமாக இருக்கிறது!' என்று உச்சரிக்கும் பார்பி பொம்மையை மட்டேல் நிறுவனம் தயாரித்தது பெரும் எதிர்ப்பலைகளைச் சந்தித்தது. இப்படி இருந்த பார்பி எப்படி ஒரு பெண்ணிய சின்னமாக உருமாறியது என்றால் காரணம் மட்டேல் நிறுவனத்தின் இன்க்ளூசிவான மார்க்கெட்டிங் தான்.
முதலில் லத்தீன் நாட்டவர் போன்ற பார்பி வெளியானது அதைத் தொடர்ந்து அமெரிக்க-ஆப்ரிக்க இன பார்பி, இந்திய பார்பி எனப் பல நாடுகளைச் சேர்ந்த பார்பிகளை உருவாக்கியது மட்டேல் நிறுவனம். தற்போது 22 தோல் நிறங்களிலும், 94 முடி நிறங்கள், 5 உடல் அமைப்புகளிலும் பார்பி உற்பத்தி செய்யப்படுகிறது. `கணக்கு வராது!' என்று சொன்ன பார்பி இப்போது மருத்துவர், பொறியாளர், அதிபர் என 200-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபடுவது போல் இப்போது உற்பத்தி செய்யப்படுகிறது. `Barbie can be anything' என்றானது.
பெண்களுக்கு இருக்கும் எல்லையற்ற வாய்ப்புகளைக் குறிக்கும் சின்னமாக முன்னிறுத்தப்பட்டது பார்பி.பார்பி நிறுவனம் செய்த இந்த மாற்றங்களைச் செய்தது. இவை, சிறுமிகளிடம் அவர்கள் எந்த வேலையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும் படியாக இருந்தது. அடிப்படையில் இது பார்பி பொம்மையின் வியாபாரத்தைப் பெருக்கும் முதலாளித்துவ வணிக உத்திதான்.
தற்போது வெளியாகியிருக்கும் பார்பி திரைப்படத்தில் க்ரெட்டா கெர்விக் பார்பியின் சிக்கலான வரலாற்றைப் பூசி மொழுகப் பார்க்கவில்லை. படத்தில் ஒரு காட்சியில் நிஜ உலகில் இருக்கும் சாஷா என்ற ஒரு மனித பதின்பருவ பெண்ணுடன் உரையாடுவாள் பார்பி. பார்பி வாழும் பார்பிலாண்டில் எல்லா பொறுப்புகளிலும் பெண்கள் தான். எல்லா இடங்களிலும் பிங்க் தான். ஆனால் நிஜ உலகில் அப்படி இல்லை. தன் இருப்பால் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கவில்லை என்று அறிந்து அதிர்ச்சியாகிறாள் பார்பி. அந்தக் காட்சியில் பார்பியிடம் சாஷா, `பார்பி ஒரு ஆண் மைய சமூகத்தின் பிரதிபலிப்பே' என்பதைக் காட்டமாகக் கூறுவாள்.
பார்பியை ஒரு பெண்ணிய சின்னமாக மட்டும் முன்னிறுத்தாமல் பார்பியின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதில் தனித்து நிற்கிறது படம்.
படத்தின் இறுதியில் எப்போதும் ஹீல்ஸ் அணிந்தபடியே இருந்து பாதமே தரையில் படாத பார்பி பிளாட்டான செருப்புடன் நடக்கும் காட்சி ஒன்று வரும். யதார்த்தமற்ற அழகுடன் இருந்த பார்பி அதிலிருந்த விலகிப் போகும் குறியீடாக முடிகிறது படம். தான் ஒரு “யோசனையாக” இருக்க விரும்பவில்லை “யோசிப்பவளாக” இருக்க விரும்புவதாகக் கூறுவாள் பார்பி. `அழகு என்றால் இதுதான்!' என்று யாரோ யோசித்த வைத்த கட்டதுக்குள் பொருந்த வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வரைந்த கோடுகளை எல்லாம் அழித்துவிட்டு புது கட்டம் போடலாம்.
பார்பி பெண்களுக்கான படம் என்று எண்ணுவதெல்லாம் அபத்தம். `Barbie can be anything, women can be anything!' என்ற வசனத்திலிருந்து தொடங்கும் படம் நம் சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் பாத்திரங்களைப் பற்றியும், சமூகம் பெண்களை எப்படி பார்க்கிறது, பெண்கள் இந்த சமூகத்தை எப்படி பார்க்கிறார்கள். ஆணாதிக்க சமூகத்தில் பார்ப்பிக்கு மட்டுமல்ல, பார்பிகளின் உலகத்தில் வாழும் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்களில், கென்னின் மனநிலை குறித்தும் பல ஆழமான புள்ளிகளை நமட்டுச் சிரிப்புடன் தொட்டுச் செல்கிறது. `பார்பி பிடிக்கும் என்றால் இந்தப் படத்தைப் பாருங்கள்.
பார்பி பிடிக்காது என்றால் நிச்சயம் இந்த படத்தைப் பாருங்கள்!' என்ற இந்த படத்தின் டேக் லைன் கச்சிதம். படம் பிடிக்கிறதோ இல்லையோ உரையாடல்களை உருவாக்கும் படமாக பார்பி இருக்கும். இந்த உரையாடல்கள் தேவையானவை. இந்த உரையாடல்கள் அவசியமானவை. சமூகத்தில் புரிந்துணர்வை அதிகப்படுத்தும் உரையாடல்களாக இவை இருக்கும் என்று நம்புவோம்.
பார்பி படம் குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
from விகடன்
Umn news
