
புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி, அமித் பார்கவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `அப்பத்தா'. இத்திரைப்படம் `ஜியோ சினிமா' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. தனது 700வது திரைப்படத்திற்குக் கச்சிதமான கதைக்களத்தைத் தேர்வு செய்திருக்கிறார், ஊர்வசி. ஆனால், இந்த `அப்பத்தா' படமாக எப்படியிருக்கிறது? இதன் ப்ளஸ், மைனஸ் என்னென்ன?
ஊறுகாய் வியாபாரம் செய்யும் கண்ணம்மா (எ) அப்பத்தா (ஊர்வசி) தனது மகன் பாவாடை சாமி (அமித் பார்கவ்) மீது அளவற்ற பாசம் கொண்டிருக்கிறார். பணி நிமித்தமாக வெளியூருக்குச் சென்ற மகனை நினைத்து சோகத்தில் வாடுகிறார். ஆனால், அம்மா கண்ணம்மா மீதும் அவளது தொழில் மீதும் மகனுக்கு வெறுப்புதான். தனது மகனை நீண்ட நாள்களுக்குப் பின் சந்திப்பதற்கு கண்ணம்மா வாஞ்சையுடன் புறப்படுகிறாள். ஆனால், மகன் தனது வீட்டிலிருக்கும் நாயைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் தாயை அழைக்கிறான். கண்ணம்மாவுக்குச் சிறுவயதிலிருந்து நாய்களைக் கண்டால் பயம். இப்போது ஒரு நாயைத் தனியாகச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அவர் அந்த நாயை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதுதான் இந்த 'அப்பத்தா'வின் கதை.
ஊர்வசியின் எமோஷனல் பக்கம் நமக்குப் பரிட்சியமான ஒன்றுதான். ஆனால், 'அப்பத்தா'வாக வாழ்ந்து மாறுபட்ட எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் அனுபவத்தால் அந்த வயதான கதாபாத்திரத்திற்குத் தேவையான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் கலங்கவும் வைக்கிறார். மகனாக வரும் அமித் பார்கவ் குறையேதும் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஆங்காங்கே தோன்றி சிறிதளவு சிரிக்க வைக்கிறார், நடிகர் அருள்தாஸ்.
அப்பத்தா, தனது கணவரின் புகைப்படத்துடன் பேசும் வெகுளித்தனமான வசனங்களும் கால மாற்றத்திற்கேற்ப திரிந்த உணவு முறை பற்றிய வசனங்களும் ரசிக்கச் செய்து, உதட்டோரத்தில் புன்முறுவலை வரவழைக்கின்றன. முதல் ஒரு மணி நேரத்திற்கு அனைத்தும் சரியாகப் பொருந்திப்போய் ஒரு ஃபீல் குட் படமாக நகர்கிறது திரைக்கதை. நாய்க்குப் பயந்து ஓடும், பறக்கும், சம்மர் சால்ட் அடிக்கும் சாகச காட்சிகளில் அப்பத்தாவைத் தாண்டி ஊர்வசியின் காமெடி உடல்மொழி கைகொடுக்கிறது. கிராமப்புற சுற்றுச்சூழலை அசலாகப் படம் பிடித்து திரையெங்கும் பச்சை வண்ணத்தை நிறைக்கிறது மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. எமோஷனல் காட்சிகளில் ராஜேஷ் முருகேசனின் இசை மேலும் உருக்குகிறது.
முதல் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், திரைக்கதை தடம் புரள்கிறது. மெலோடிராமாவாக அழகாகத் தொடங்கி அப்பத்தா தனது தொழில் மூலம் பிரபலமடைகிறார் என்பது போன்ற வழக்கமான க்ளிஷே காட்சிகள் 'இந்த கிரிஞ்சுக்கு இல்லையா சார் ஒரு எண்டு' என நம்மைக் கேட்க வைக்கின்றன. ஒட்டுமொத்த படமும் அந்தக் கட்டத்தில் யூ-டர்ன் அடித்த உணர்வே ஏற்படுகிறது. படம் மொத்தமும் பார்த்தால் ஒரு லாக்டௌன் காலத்து ஆந்தாலஜி படம் பார்த்த உணர்வே மிஞ்சுகிறது. அதேபோல பழைமையான மேக்கிங் உணர்வும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.
படத்தின் பிற்பாதி திரைக்கதை திசை மாறாமல் பயணித்திருந்தால் இந்த `அப்பத்தா' இன்னும் அதிக வாஞ்சையுடன் நம்மை அரவணைத்திருப்பார்.
from Movie Reviews
Umn news
