Ponman Review: 'கல்யாண வீட்டில் திக்... திக்... திக்...' - பேசில் ஜோசப்பின் 'பொன்மேன்' மின்னுகிறதா?

0

கொல்லத்தைச் சேர்ந்த ப்ரூனோ (ஆனந்த் மன்மதன்), தனது சகோதரி ஸ்டெஃபி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் தாயுடன் (சந்தியா ராஜேந்திரன்) வாழ்ந்து வருகிறார். தனது மகள் ஸ்டெஃபியின் திருமணத்திற்கு நகை சேர்ப்பதற்கு அரும்பாடு படுகிறார் அவரின் தாயார். மாப்பிள்ளை வீட்டார் நகை விஷயங்களில் கராராக இருப்பதோடு, கூடுதல் நகையும் கேட்பதால், கூடுதல் பிரஷரும் அவரின் தாயாருக்கு வருகிறது.

ஸ்டெஃபியின் சகோதரரான ப்ரூனோ பணம் ஈட்டுவதற்கான முயற்சிகள் எடுக்காமல் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு, நண்பர்கள் மூலமாக முயற்சிகளை மேற்கொண்டு தங்கையின் திருமணத்திற்கு 25 சவரன் நகையைப் பெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறார்.

Ponman Movie Review
Ponman Movie Review

பி.பி. அஜேஷ் (பேசில் ஜோசப்) என்ற வியாபாரி ஒருவர் ஸ்டெஃபிக்கி நகை கொடுக்கிறார். ஆனால், திருமணமான அடுத்த நாளே அந்த நகைக்கான பணத்தைத் தன்னிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என ஒப்பந்தத்தையும் போடுகிறார் அஜேஷ். ஆனால், திருமணம் முடிந்ததும் நகையைத் திரும்பிக் கொடுக்க முடியாமல் தத்தளிக்கிறது ஸ்டெஃபியின் குடும்பம். ஸ்டெஃபியின் கணவர் மரியனோவும் ( சஜின் கோபு) அதை திரும்பக் கொடுக்க மறுக்கிறார். தனது முதலாளிக்குப் பதில் கூற முடியாமல் பயந்து ஓடும் அஜேஷ் பல பிரச்னைகளையும் சந்திக்கிறார். நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அஜேஷ் நகையை ஸ்டெபியின் கணவரிடமிருந்து மீட்டாரா என்பதுதான் இந்த `பொன்மேன்' படத்தின் கதை.

ஸ்டெஃபி கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து, கணவரைக் கண்டு பயம் கொள்ளும் இடத்திலும் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெகுண்டெழும் இடத்திலும் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்து மனதில் பதிகிறார் லிஜோமோல் ஜோஸ். கணவராக சஜின் கோபு படம் முழுக்க மூர்க்க குணமுடையவராகப் பல விஷயங்களை நிகழ்த்தி வெறுப்பைச் சம்பாதிக்கும் வில்லனாக வெற்றி பெற்றிருக்கிறார். அதிலும் நகையின் மீது பேராசைக் கொண்டு கண்களை விரித்து சண்டை போடும் இடமெல்லாம் பயங்கரம் 'அம்பான் சேட்டா'! தர்மசங்கடத்தில் சிக்கித் தத்தளிக்கும் பேசில் ஜோசப், படத்தைத் தனது தோள்களில் தூக்கிச் சுமந்திருக்கிறார்.

Ponman Movie Review
Ponman Movie Review

தன்னுடைய நகையை எப்படியாவது மீட்டு முதலாளியின் கடனிலிருந்து மீள வேண்டும் எனப் போராடும் காட்சிகளிலெல்லாம் அதிரடியாகவும் எமோஷனலாகவும் சில தருணங்களிலும் காமெடியாகவும் ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார் பேசில் ஜோசப். லிஜோமோலின் அண்ணனாக வரும் ஆனந்த் மன்மதன், இவரின் நண்பராக வரும் தீபக் பரம்போல் ஆகிய இருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு டீசன்ட்டான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மணப்பெண் வீட்டில் நிகழும் விஷயங்களைக் காமெடி கொஞ்சம் + எமோஷனல் கொஞ்சம் என முழுக்கதையாகக் கோர்த்து அதை என்டர்டெயின் செய்யும் வகையில் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோதிஷ் ஷங்கர் ( கும்பலங்கி நைட்ஸ் படத்தின் கலை இயக்குநர் இவர்). எழுத்தாளர் இந்து கோபனின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.

எளிதில் கணிக்கும்படியான திருப்பங்கள் படம் முழுவதும் நிறைந்திருப்பது மைனஸ்தான் என்றாலும், போதுமானவரை நம்மைப் பதைபதைப்புடன் நகர வைத்து, மைனஸ்ஸைப் பெரிய மைனஸாக மாறாமல் தடுத்திருக்கிறது திரைக்கதையாசிரியர்கள் இந்து கோபன், ஜஸ்டின் மேத்யூ ஆகியோரின் உழைப்பு. வரதட்சணை கலாசாரம் விளிம்புநிலையிலிருக்கும் குடும்பத்தை எப்படியான சிரமத்திற்கு உட்படுத்துகிறது என்பதை அழுத்தமில்லாமல் கதையின் போக்கினிலேயே பதிவு செய்ததற்காக இந்த திரைக்கதையாசிரியர்களுக்கு அடிப்பொலி சொல்லிக் கைதட்டல் கொடுக்கலாம்.

Ponman Movie Review
Ponman Movie Review

`பெண்களுக்கு நகைகளே அழகு, அதுவே அவர்களுக்கு முக்கியம்' எனக் காலங்காலமாகக் கற்பிக்கப்படும் விஷயங்களையெல்லாம் தவிடு பொடியாக்குகிறது இவர்கள் அழுத்தமாக எழுதியிருக்கும் வசனங்கள்.

மரியனோ கதாபாத்திரத்திற்கு இடைவேளை பில்டப் க்ளிக் ஆகியிருந்தாலும், இரண்டாம்பாதியில் இன்னும் கூடுதலாக அக்கதாபாத்திரத்தை விளக்கியிருக்கலாம். மேலும், த்ரில்லிங்கை மட்டும் நம்பாமல், திரைக்கதையில் வெவ்வேறு லேயர்களைச் சேர்த்து, சுவாரஸ்யம் கூட்டத் தவறுகிறது.

பாடல்களின் வழியே நிலப்பரப்பையும் அதனைச் சுற்றியுள்ள கலாசாரங்களையும் பதிவு செய்யும் டெம்ப்ளேட்டை இப்படத்திலும் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சணு ஜான் வர்கீஸ்ஸின் ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது. கதாபாத்திரங்களின் தன்மையை கேமரா கோணங்களின் மூலமாக அழுத்தமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீஸ்ஸின் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை பரபரப்பிற்குக் கைகொடுத்தாலும், எமோஷனல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் இன்னும் பவர்ஃபுல்லாக டீல் செய்திருக்கலாம்.

Ponman Movie Review
Ponman Movie Review
பொன்னை மையப்படுத்திய எளிமையான கதையால் நம்மை ஆச்சரியப்படுத்தி என்டர்டெயின் செய்யும் இந்த `பொன் மேன்' சினிமா, உண்மையான 24 கேரட் தங்கம்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal



from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*