'காலையில் பாஜக-வுக்கு, மாலையில் திமுக-வுக்கு' - டிவி பிரபலங்கள் செய்த‌ பிரசாரம்

0

'உங்கிட்ட வாங்கின காசுக்கு தென்னமரத்துல ஒரு குத்து, அந்தாளு கிட்ட வாங்கின காசுக்கு ஏணிச் சின்னத்துல ஒரு குத்து' என நடிகர் முத்துக்காளை வடிவேலுவிடம் சொல்லும் நகைச்சுவை காட்சி ரொம்பவே பிரபலம்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலர் இதே ரேஞ்சில் இறங்கி வேலை பார்த்துள்ளனர். அதாவது பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகனுக்கு ஆதரவாக அவரது தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு, அடுத்த நாளே திருவள்ளூர் திமுக வேட்பாளரான வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துள்ளனர்.

இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் ஒரு ரவுண்டு வந்து விசாரித்தோம்.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த தினேஷ்
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த தினேஷ்

''நிறைய சின்னத்திரை நட்சத்திரங்கள் இந்தத் தேர்தலில் தங்களது அபிமான கட்சிகளுக்காகப் பிரசாரம் செய்தாங்க. நடிகர்கள் சஞ்சீவ், பிக்பாஸ் தினேஷ், ராஜு, அருண் ஆகியோர் சென்னையில் தவெகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாங்க. இவங்க தங்களை தவெக ஆதரவாளர்களாக வெளிப்படையாக அறிவிச்சுட்டுப் பிரசாரம் செஞ்சாங்க.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளரான போஸ் வெங்கட் திமுக-வில் பொறுப்பு வகிப்பதால் அவருமே திமுக-வுக்காகப் பிரசாரம் செய்தார்.

நடிகர் நவீந்தர் திமுக-வில் நட்சத்திரப் பேச்சாளரா இருக்கறதால அவரும் சில தொகுதிகளில் பிரசாரம் செஞ்சார்.

naveender
naveender

நடிகை அம்மு, நடிகர்கள் ராஜ் கமல், தேவானந்த் ஆகியோர் பாஜக-வுக்காகப் பிரசாரம் செய்ததாகச் சொல்றாங்க.

அதிமுக-வுக்காகவும் சில நடிகர் நடிகைகள் பிரசாரம் செஞ்சாங்க.

ஆர்ட்டிஸ்டுகள் அவங்கவங்க விருப்பப்படுகிற கட்சிகளுக்காகப் பிரசாரம் செய்யறதுல தப்பு ஒண்ணுமில்லையே" என்றார்கள், பெயர் குறிப்பிட விரும்பாத சில சீனியர் ஆர்ட்டிஸ்டுகள்.

'அதெல்லாம் சரி சிலர் எதிரெதிர் கட்சிகளுக்குப் பிரசாரம் செய்தார்களாமே, இப்படிச் செய்கிற பட்சத்துல ரசிகர்கள் தப்பா நினைக்க மாட்டாங்களா' என்ற கேள்வியை அவர்களிடம் முன்வைத்தோம்.

barath,rajkanth -with l murugan
barath,rajkanth -with l murugan

''முன்னாடி டிவி நட்சத்திரங்களை கலை நிகழ்ச்சிகள் நடத்த தேர்தல் நேரங்களில் எல்லா கட்சிகளும் கூப்பிடும். அந்த மாதிரி கூப்பிடுகிறப்போ போயிட்டு வர்றதுல தப்பில்லை. ஆனா காசு வருதேன்னு எதிரெதிர் கட்சிகளுக்குப் பிரசாரம் செய்யறது நல்லதில்லை. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள்தான் அதுபத்தி யோசிக்கணும்" என முடித்துக் கொண்டார்கள்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் சீனியர் நடிகர் ராஜ்காந்த் முதல் வாரம் எல்.முருகனுக்கும், மறு வாரம் திமுக வேட்பாளர் வி.ஜி ராஜேந்திரனுக்கும் பிரசாரம் செய்ததாகத் தெரியவருகிறது.

நடிகர் பரத்துமே பாஜக மற்றும் திமுக மேடைகளில் தென்பட்டதாகக் கூறுகின்றனர்.



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*