கதாநாயகன் தினேஷும் (ஜுனைத் கான்), நாயகி மீரா ரங்கநாதனும் (சாய் பல்லவி) ஒரே ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மீராவை ஒருதலையாக காதலிக்கிறார் தினேஷ்.

அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஜப்பானுக்கு டூர் செல்கிறார்கள். ஜப்பானுக்குச் செல்ல வேண்டும் என்பது மீராவுக்குச் சிறு வயதிலிருந்தே ஆசை.

Ek Din Review | ஏக் தின் விமர்சனம்

ஆனால் அங்கு நடக்கும் ஒரு விபத்தினால் மீராவுக்குத் தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. அதனால், சமீபத்திய நினைவுகள் ஒரு நாள் முழுவதும் அவரின் நினைவுக்கு வராது. அதற்கு அடுத்த நாள் நினைவு திரும்பிவிடும்.

இந்த ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் என்னென்ன, இந்த ஒரு நாளில் தினேஷ் தனது காதலை வெளிப்படுத்தினாரா என்பதுதான் சுனில் பாண்டே இயக்கியிருக்கும் இந்த பாலிவுட் படத்தின் கதை.

இன்ட்ரோவெர்ட் (அகவயத்தன்மை) குணாதிசயத்துடன், தன் மீது நம்பிக்கை இழந்தவராக, தாழ்வு மனப்பான்மை உடையவராக, நடுக்கம் கலந்த உடல்மொழியை நடிப்பில் பக்குவமாகச் சேர்த்திருக்கிறார் நாயகன் ஜுனைத் கான். ஆனால், எமோஷனல் காட்சிகளில் உயிர்ப்பற்ற நடிப்பைத் தந்து போவது ஏமாற்றம் ஜுனைத்!

Ek Din Review | ஏக் தின் விமர்சனம்

காதலில் ஏற்படும் ஏமாற்றம், அது உண்டாக்கும் வலி என எமோஷனல் களத்தில், தனது பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் சாய் பல்லவி.

ஜப்பானைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற சிறு வயதுக் கனவு சாத்தியப்படும் தருணத்தில் நடிப்பில் பூரிப்பையும் ஏற்றியிருக்கிறார்.

அனுதாபத்தின் வழி மீராவை அடைய நினைப்பவராக குணால் கபூர் கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டுப் போகிறார்.

Patriot Review: ஒட்டுக்கேட்கும் ஸ்பைவேர், கேள்விகேட்கும் மம்மூட்டி, மோகன்லால்; சேட்டன்களின் அடிபொலி!

நொய்டாவின் ஐடி நிறுவன வளாகங்களையும், பனி மூடியிருக்கும் ஜப்பானையும், கொண்டாட்டம் நிறைந்த அதன் முக்கியச் சுற்றுலாத் தளங்களையும் நேர்த்தியுடன் பிரேமுக்குள் புகுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் லோபோ.

ஒரு நாள் காதல் கதையைத் தொய்வின்றிச் சொன்ன விதத்திற்கு வெல் டன் சொல்ல வைக்கும் படத்தொகுப்பாளர் பல்லு சலூஜா, சுற்றி வளைத்துச் சொல்லும் க்ளைமாக்ஸை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்.

Ek Din Review | ஏக் தின் விமர்சனம்

பனி வீசும் களத்தில் நகரும் காதல் கதைக்கு மென்மையான தூறலைப் போன்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ராம் சம்பத். பாடல்களில் குறை இல்லை என்றாலும், அவற்றில் சில கதைக்குத் தடை போடும் கருவியே!

கிராபிக்ஸ் உதவி பெரியளவில் இப்படத்திற்குத் தேவைப்படவில்லை என்றாலும், 'ஃபார்ட்யூன் பெல்' உள்ளிட்ட ஓரிரு விஷயங்களை கிராபிக்ஸ் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதன் தரத்தை கவனித்திருக்கலாம்.

2016-ம் ஆண்டு வெளிவந்த `ஒன் டே' என்கிற தாய் மொழிப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இந்த `ஏக் தின்'. நாயகிக்குச் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் எதுவும் நினைவில்லாத ஒரு நாள், அந்த நாளில் தனது காதலுக்கு உருவம் தரும் ஒரு இன்ட்ரோவெர்ட் நாயகன் என்கிற ஒன்லைனைக் கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சுனில் பாண்டே.

Ek Din Review | ஏக் தின் விமர்சனம்

கதாநாயகன், தன்னைப்பற்றிய சுய விளக்கங்கள் தந்தபடி திரைக்கதைக்குள் நுழையும் இப்படம் ஆர்ப்பாட்டமில்லாமல் மிதமான வேகத்தில் முதல் 30 நிமிடங்களைக் கடக்கிறது.

பிறகு ஜப்பானுக்கு டேக் ஆஃப் ஆகும் கதையும் மாற்றமில்லாத அலைவரிசையிலேயே செல்கிறது. நாயகிக்கு ஏற்படும் விபத்து, அதனால் வரும் மெமரி லாஸ் எனச் சோதனை பனி மூட்டத்திற்குள் சிக்கி, களைப்பை முறிக்க வைக்கும் திரைக்கதை, தட்டுத்தடுமாறித் தடைக்கோட்டைத் தாண்டுகிறது.

Kara Review: 90களின் தொடக்கத்தில் ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர்; தடுமாறாமல் கரைசேர்கிறாரா இந்த கரசாமி?

ஒரு நாள் மட்டும் சமீபத்திய நிகழ்வுகளை மறந்துவிடும் நாயகி, அன்றைய நாளில் தான் வாழ நினைத்த வாழ்க்கைக்குத் தினேஷ் உயிர் தரும் படலம் நெகிழ்ச்சியூட்டும் பகுதி!

நாயகி எங்கே நாயகனின் உண்மை முகத்தைக் கண்டுபிடித்துவிடுவாளோ என்கிற கதையை லேசான பரபரப்போடு நகர்த்தியிருப்பதும் அழகு!

Ek Din Review | ஏக் தின் விமர்சனம்

தான் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதாகத் திருப்தி கொள்ளும் நாயகன் தியாகி பட்டம் வாங்கிக்கொள்வது, பிறகுத் தன் காதலைத் தெரியப்படுத்துவதற்கு வேண்டுமென்றே அவரே செய்யும் வேலையெல்லாம் குழப்பங்களின் குவியலே!

அதோடு நம்பகத்தன்மையில்லாத நிகழ்வுகளோடு சுற்றிக்கொண்டே வரும் க்ளைமாக்ஸும், தலை சுற்ற வைத்து நமக்கு மெமரி லாஸ் உண்டாக்கும் எபிசோடு.

ஒரு நாள் காதல் கதை நம்மைக் கவர்ந்தாலும், சமகால சினிமாவுக்கேற்ப ரீமேக்கை மாற்றியிருந்தால், இந்த `ஏக் தின்'னை, என்றும் நிலைத்து நிற்கும் காதல் படைப்பாகக் கொண்டாடியிருக்கலாம்.

from Movie Review | திரை விமர்சனம்

Umn news <a